பாதிப்பு: 'நிவர்' புயலால் மாவட்டத்தில் கடுமையான... தண்ணீரில் தத்தளிக்கும் விளைநிலங்கள்

தினமலர்  தினமலர்
பாதிப்பு: நிவர் புயலால் மாவட்டத்தில் கடுமையான... தண்ணீரில் தத்தளிக்கும் விளைநிலங்கள்

விழுப்புரம்; நிவர் புயலின் தாக்கத்தை யொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால், ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர், வாழை சாகுபடி அனைத்தும் வீணாகியது. குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்ததுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே நிவர் புயல் நேற்று முன்தினம் இரவு கரையை கடந்தது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 8.00 மணி முதல் கனமழை கொட்ட துவங்கியது. நேற்று காலை 8.00 மணிவரை நீடித்த இந்த கனமழையால், மாவட்டத்தில் விளைநிலங்கள், குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தத்தளித்த விழுப்புரம்இதில், விழுப்புரத்தில் புதிய பஸ் நிலையம் முழுதும் தண்ணீர் தேங்கியுள்ளது. நகராட்சி மைதானத்தில் பெருமளவு மழைநீர் குளமாக தேங்கியதால், அங்கு காய்கறி கடை வைத்துள்ள வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கீழ்பெரும்பாக்கம் தரைபாலத்தின் மேற்பகுதி வரை தண்ணீர் தேங்கி, பெருமளவில் சூழ்ந்து வெள்ளம் காட்சியளிக்கிறது.சாலாமேடு, பெரியார் நகர், இந்திரா நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். விழுப்புரம், கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விழுப்புரத்தில் பல்வேறு இடங்களில் தண்ணீர் புகுந்தால் விழுப்புரம் நகரம் தண்ணீரில் தத்தளிக்கின்றது.நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்அதே போல், கனமழையால், விக்கிரவாண்டி - கும்பகோணம் நான்கு வழிச்சாலை திட்டப்பணிகளால் வாணியம்பாளையம், புருஷானூர், மழவராயனூர் உள்பட அங்குள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, தண்ணீர் செல்ல வழியின்றி சூழ்ந்துள்ளது.

இதனால் அங்கு, விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கியது. கிராம மக்களே சாலையோரத்தை உடைத்து, வாய்க்காலில் தண்ணீர் செல்லும் வழியை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அது மட்டுமின்றி கண்டமங்கலம் ஒன்றியத்தில் வாழையும், மற்ற பகுதிகளில் முருங்கை உட்பட 1,500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி பொருட்கள் முற்றிலும் மழைநீரில் மூழ்கியும், காற்றிலும் பலத்த சேதமடைந்தன.புயலால் சாய்ந்த மரங்கள்விழுப்புரம் மாவட்டத்தில், நிவர் புயல் மூலம் பெய்த கனமழையால் ஒரே இரவில் 23 இடங்களில் வேப்ப மரம், புளியமரம் உள்பட பல்வேறு மரங்கள் சாலைகளில் சாய்ந்தது. மரக்காணம் அருகே வடகொடிபாக்கம், அனுமந்தை, அழகன்குப்பம், ஒலக்கூர், பாஞ்சாலம், கூச்சிகொளத்துார், வானுார், கரசானுார், ஓட்டை, அரகண்டநல்லுார், மயிலம், வளவனுார், செஞ்சி, சின்னகோட்டக்குப்பம், பெரியமுதலியார் சாவடி உள்பட பல்வேறு இடங்களில் இரவில் விழுந்த மரங்களை, பொக்லைன் மூலம் உடனடியாக அப்புறப்படுத்தும் பணிகளை, எஸ்.பி., ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

கரண்ட் 'கட்'மழையின் காரணமாக மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.00 மணி முதல் பல்வேறு இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று காலை 8.00 மணிக்கு மேல் ஒவ்வொரு பகுதிகளாக மின் இணைப்பு வழங்கப்பட்டது.

மாவட்டத்தில் அதிகபட்ச மழைவிழுப்புரத்தில் பதிவுவிழுப்புரம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையளவு விபரம் :விழுப்புரத்தில் 279 மி.மீ., மழையும், கோலியனுாரில் 243.80 மி.மீ., வளவனுார் 242 மி.மீ., கெடார் 190 மி.மீ., முண்டியம்பாக்கம் 170 மி.மீ., நேமூர் 160 மி.மீ., கஞ்சனுார் 169 மி.மீ., சூரப்பட்டு 168 மி.மீ., வானுார் 137 மி.மீ., திண்டிவனம் 141 மி.மீ., மரக்காணம் 130.50 மி.மீ., செஞ்சி 154.40 மி.மீ., செம்மேடு 150 மி.மீ., வல்லம் 139 மி.மீ., அனந்தபுரம் 149 மி.மீ., அவலுார்பேட்டை 92 மி.மீ., வளத்தி 160 மி.மீ., மணம்பூண்டி 152 மி.மீ., முகையூர் 153 மி.மீ., அரசூர் 160 மி.மீ., திருவெண்ணெய்நல்லுார் 162 மி.மீ., உட்பட மாவட்டத்தில் மொத்தம் 3,501.80 மி.மீ., மழையளவு பதிவாகியது. இதன் சராசரி 166.75 மி.மீ., ஆகும்.

மூலக்கதை