கட்டப்படுமா?: க.மாமனந்தல் - ரோடுமாமந்தூர் இடையே மேம்பாலம்...மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் கண்டு கொள்வார்களா?

தினமலர்  தினமலர்
கட்டப்படுமா?: க.மாமனந்தல்  ரோடுமாமந்தூர் இடையே மேம்பாலம்...மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் கண்டு கொள்வார்களா?

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றில் க.மாமனந்தல் - ரோடுமாமந்துார் இடையே உயர்மட்ட பாலம் கட்ட மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த க.மாமனந்தல் ஊராட்சியில் உள்ள கிராம மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் பல்வேறு பணி நிமித்தம் காரணமாக கள்ளக்குறிச்சி நகருக்கு வந்து செல்கின்றனர்.அனைவரும், கோமுகி ஆற்றைக் கடந்து நகருக்கு வருகின்றனர். மேலும், விவசாயிகள் தங்களது விளைபொருட்களை டிராக்டர் டிப்பர், டாடா ஏஸ் போன்ற வாகனங்களில் கோமுகி ஆற்றைக் கடந்து எடுத்துச் செல்கின்றனர்.கரடு முரடாக உள்ள கோமுகி ஆற்றைக் கடக்கும் போது கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மேலும், பருவ மழைக் காலங்களில் கோமுகி அணையிலிருந்து தண்ணீர் திறக்கும்போது, ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள 5 கி.மீ., தொலைவு சாலை வழியாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.இரவு நேரங்களில் இந்த சாலையில் போதிய மின்விளக்கின்றி இருள் சூழ்ந்து காணப்படுவதால் அவ்வழியே செல்ல மக்கள் அச்சமடைகின்றனர்.இதனைத் தவிர்க்க கா.மாமனந்தல் - ரோடுமாமந்துார் இடையே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஒவ்வொரு சட்டசபை, லோக்சபா தேர்தலின் போதும், தங்களது ஊருக்கு ஓட்டு சேகரிக்க வரும் அரசியல் பிரமுகர்களிடம் இக்கோரிக்கையை வலியுறுத்தி மனுவும் அளித்து வருகின்றனர்.அத்தருணத்தில், கண்டிப்பாக நிறைவேற்றி தரப்படும் என்று வாக்குறுதி அளிப்பவர்கள் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் கண்டு கொள்வதில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.சில நாட்களாக கள்ளக்குறிச்சி பகுதியில் அவ்வப்போது பெய்து வரும் பலத்த மழையால், தற்போது கோமுகி ஆற்றில் தண்ணீர் சீரான அளவில் செல்கிறது. இருப்பினும், கிராம மக்கள் நீண்ட துாரம் சுற்றிச் செல்ல சிரமப்பட்டும், நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டும் ஆற்றைக் கடந்து ரோடுமாமந்துார் வழியாகச் செல்வதிலேயே முனைப்பு காட்டுகின்றனர்.

சில நேரங்களில் ஆற்றில் இடுப்பளவு தண்ணீர் ஓடினாலும் ஆபத்தை உணராமல் கடும் சிரமங்களுக்கு இடையே சிலர் ஆற்றைக் கடந்து செல்கின்றனர். அத்தருணத்தில், அங்குள்ள கற்களில் சிக்கி தண்ணீரில் அடித்து செல்லும் அபாயமும் உள்ளது.எனவே, கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கா.மாமனந்தல் - ரோடுமாமந்துார் இடையே உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலக்கதை