சூழ்ந்தது - கடலூரில் குடியிருப்புப் பகுதிகளை தண்ணீர்... சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை

தினமலர்  தினமலர்
சூழ்ந்தது  கடலூரில் குடியிருப்புப் பகுதிகளை தண்ணீர்... சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை

கடலுார்-கடலுாரில் சூறைக்காற்றுடன் விடிய விடிய கொட்டி தீர்த்த கன மழையால், குடியிருப்புப் பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது.

நிவர் புயல் சின்னம் காரணமாக கடலுார் மாவட்டத்தில் நள்ளிரவு 11 மணி முதல் பலத்த சூறைக்காற்றுடன் விடிய விடிய கன மழை கொட்டி தீர்த்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.கடலுார் ஜட்ஜ் பங்களா ரோடு, பீச் ரோட்டில் இரண்டு அடி வரை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், போக்குவரத்து பாதித்தது. வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.புதுப்பாளையம் மணலி எஸ்டேட், வண்ணாரப்பாளையம், திருப்பாதிரிப்புலியூர், குண்டுஉப்பலவாடி, மஞ்சக்குப்பம் அழகப்பா நகர், காமராஜ் நகர், தேவநாத சுவாமி நகர், சிவானந்தா நகர், பத்மாவதி நகர், முதுநகர் பனங்காட்டு காலனி, பாதிரிக்குப்பம் முருகேசன் நகர், கூத்தப்பாக்கம், உப்பலவாடி, முதுநகர் மீன்மார்க்கெட், வண்டிப்பாளையம், வடுகப்பாளையம், உட்பட பல இடங்களில் குடியிருப்புப் பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது.பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.

கடலுார் நகராட்சி சார்பில் நகரில் தேங்கிய தண்ணீரை ராட்சத மோட்டார் மூலம் அப்புறப்படுத்தினர். கிராமப்புற சாலைகளில் பல இடங்களில் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதித்தது.புயலால் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கடலுாரில் மின் தடை ஏற்பட்டது.

இதனால், தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவும் சூழல் ஏற்பட்டது. வழக்கமாக கேப்பர் மலை பகுதியில் உள்ள எம்.புதுாரில் இருந்து டிராக்டர் மற்றும் டாடா ஏஸ் வேன், லாரிகளில் போர்வெல் தண்ணீரை தனிநபர்கள் விலைக்கு வாங்கி வந்து, கடலுார் நகர பகுதியில் விற்பனை செய்வர்.நேற்று மின் தடை காரணமாக ஜெனரேட்டர் இயக்கப்பட்டு, போர்வெல் மூலம் வாகனங்களில் தண்ணீர் பிடித்து வந்து கடலுார் பகுதியில் குடம் ரூ. 7க்கு விற்பனை செய்தனர்.

மூலக்கதை