அதிக உயிர்ப்பலி இல்லை: முதல்வருக்கு சபாஷ்!

தினமலர்  தினமலர்
அதிக உயிர்ப்பலி இல்லை: முதல்வருக்கு சபாஷ்!

சென்னை : மக்களை அச்சுறுத்தி வந்த 'நிவர்' புயல் கரை கடந்துள்ள நிலையில், தமிழக முதல்வர் இ.பி.எஸ்., அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து, முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்தியதால், அதிக உயிர்பலி இன்றி, தமிழகம் தப்பியது.
இதனால், நிம்மதி அடைந்துள்ள மக்களும், சமூக ஆர்வலர்களும், முதல்வருக்கும், அரசுக்கும், 'சபாஷ்' போடும் நிலை ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகளை அரசு முடுக்கி விட்டதால், தமிழகம் மீண்டும் இயல்வு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளது.



வங்கக்கடலில் உருவான, 'நிவர்' புயல், அதிதீவிர புயலாக, தமிழகம், புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையே கரையை கடக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதனால், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, தமிழக அரசை, மத்திய ஜல்சக்தி அமைச்சகம் எச்சரித்தது.

இதையடுத்து, தமிழக அரசு துரித கதியில் களம் இறங்கியுள்ளது. பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, உடனடியாக மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பித்தார்.
'புயல் கரையை கடக்கும் நேரத்தில், பொதுமக்கள் யாரும் வெளியில் செல்ல வேண்டாம்' என, முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். சென்னை எழிலகத்தில், பேரிடர் மேலாண்மை மையத்தின், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை முடுக்கி விடப்பட்டது. அமைச்சர் உதயகுமார், அங்கேயே முகாமிட்டிருந்தார்.

சென்னையில், பொதுமக்கள் மற்றும் சரக்கு வாகனங்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், முக்கிய சாலைகள் மூடப்பட்டன.அதேநேரம், செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும் நிலையை எட்டியதால், முழுதும் நிரம்பும் வரை காத்திருக்காமல், நீர் திறக்க, நேற்று முன்தினம் பகலில், முதல்வர் உத்தரவிட்டார். அதன்படியே, நீர் வெளியேற்றம் ஒரேயடியாக இல்லாமல், படிப்படியாக உயர்த்தப்பட்டது. உடனே, செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்ற முதல்வர் இ.பி.எஸ்., அங்கு ஆய்வும் நடத்தினார். நிலவரம் குறித்து, பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

கரையை கடந்தது




வானிலை மையம் அறிவித்தபடி, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், அதிகாலை வரை, நிவர் புயல் கரையை கடந்தது. இதனால், புதுச்சேரி மாநிலத்திலும், தமிழகத்தில், கடலுார், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், அதிக மழை பெய்தது.
புயலின் கோர தாண்டவத்தால், பெரும் பாதிப்பு ஏற்படுமோ என, மக்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால், அரசு எடுத்த முன்னேற்பாடு நடவடிக்கைகளால், அதிக அளவில் உயிர் சேதம்; பெரும் பாதிப்புகள் இல்லாமல், தமிழகம் தப்பியது. இதனால், மக்கள் நிம்மதி நிம்மதி அடைந்துள்ளனர். இந்த நடவடிக்கைகளுக்கு காரணமான அரசுக்கும், முதல்வர் இ.பி.எஸ்.,சிற்கும் பல தரப்பிலும், பாராட்டுக்கள் குவிகின்றன.

சென்னை தப்பியது



கடந்த, 2015ம் ஆண்டை போல, வெள்ள அபாயம் ஏற்படும் என்ற அச்சத்தில், சென்னை அடையாறு கரையோர மக்கள் அச்சத்தில் இருந்தனர். முன்கூட்டியே நீர்வரத்து நிலவரங்களை கண்காணித்து, செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறக்கப்பட்டதால், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால், அடையாறு கரையோர மக்களும் நிம்மதி அடைந்து, தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்ப துவங்கியுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசித்தவர்கள் மட்டுமே தொடர்ந்து, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

கடலுாரில் முதல்வர்




இதனிடையே, கடலுார் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளில், முதல்வர் இ.பி.எஸ்., நேற்று ஆய்வு செய்தார். அங்கு புனரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்வதற்கு துறைகளின் அமைச்சர்கள், அதிகாரிகள், கடலுார் மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டார்.
துணைமுதல்வர் பன்னீர்செல்வமும், வெள்ளம் பாதித்த தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார். வெள்ள முன்னெச்சரிக்கை பணிகளில், சிறப்பாக செயலாற்றிய அதிகாரிகளை பாராட்டினார். புனரமைப்பு பணிகளை விரைந்து கொள்ள அறிவுரை வழங்கினார்.
சென்னை உட்பட, பல்வேறு மாவட்டங்களில், ஆங்காங்கே விழுந்து கிடந்த மரங்கள் அகற்றும் பணி முடுக்கி விடப்பட்டது. முன்னெச்சரிக்கையாக, மின் வினியோகம் நிறுத்தப்பட்ட பெரும்பாலான பகுதிகளிலும், நேற்று மின் வினியோகம் சீரடைந்தது.

இதன் காரணமாக, புயல் பாதிப்புகள் நீங்கி, தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பியது.சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும், சரக்கு வாகன போக்குவரத்து, அரசு பஸ் போக்குவரத்து சேவை மீண்டும் துவங்கியுள்ளது. ரயில்களும் ஓட துவங்கியுள்ளன. தமிழக அரசு, அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து, நிவர் புயலை கையாண்ட விதம், பல தரப்பினரையும், 'சபாஷ்' போட வைத்துள்ளது; இனி எத்தகைய இயற்கை பேரிடரையும், தமிழகத்தால் சமாளிக்க முடியும் என, நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

'இயற்கையை கையாள்வதில் புது இலக்கணம்



சென்னை எழிலகத்தில் உள்ள,மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில், அமைச்சர் உதயகுமார் கூறியதாவது:'நிவர்' புயல், புதுச்சேரி அருகே கரையை கடந்துள்ளது. புயலால் பாதிப்பிற்கு உள்ளாகும் என, கண்டறியப்பட்ட பகுதிகளுக்கு, தேசிய பேரிடர் மீட்பு படையின், 15 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ராணுவத்தின் எட்டு குழுக்கள், இரண்டு பாதுகாப்பு படகுகளுடன் சென்னை வந்துள்ளன. மேலும், ஆறு குழுக்கள் ஒரு பாதுகாப்பு படகுடன், திருச்சியில் முகாமிட்டுள்ளன.

மழையால், மாநிலம் முழுவதும், 14 ஆயிரத்து, 144 பாசன ஏரிகளில், 1,697 ஏரிகள் நிரம்பியுள்ளன. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 15 மாவட்டங்களில், 3,042 தங்கும் மையங்களில், 2.25 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இதுவரை, 880 நிரந்தர மருத்துவ முகாம்களும், 244 நடமாடும் மருத்துவ முகாம்களும் நடந்துள்ளன. இதன் வாயிலாக, 73 ஆயிரத்து, 491 பேர் பயன் பெற்றுள்ளனர்.

இந்திய கடற்படையின், ஐ.என்.எஸ்., ஜோதி கப்பல், சென்னைக்கு வடக்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐ.என்.எஸ்., சுமத்ரா கப்பல் சென்னைக்கு வருகிறது. இக்கப்பல்களில் வெள்ள மீட்பு குழுக்கள், மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன.

தொலை தொடர்பு துண்டிப்பு ஏற்படாத வகையில், கடலோர மாவட்டங்களில், 19 நடமாடும் மொபைல் போன் கோபுரங்கள் உள்ளன. நிவர் புயலால் மூன்று பேர் இறந்துள்ளனர்; 98 குடிசை வீடுகள், 20 ஓட்டு வீடுகள் என, மொத்தம், 118 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதுமட்டுமின்றி, 29 கால்நடைகள் இறந்துள்ளன. சாலைகளில், 505 மரங்களும், 469 மின்கம்பங்களும் வீழ்ந்துள்ளன. அவற்றை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. வாழை மரங்கள், 14 ஏக்கரில் சேதமடைந்துள்ளன.

அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகளால், பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். இயற்கையை கையாள்வதில் புதிய இலக்கணத்தை, முதல்வர் இ.பி.எஸ்., படைத்துள்ளார்.இவ்வாறு, உதயகுமார் கூறினார்.


முதல்வர்களிடம் அமித் ஷா உறுதி



தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை நிவர் புயல் தாக்கியது. இதனால், புதுச்சேரி மாநிலம் மற்றும் தமிழகத்தின் கடலுார் மாவட்டங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று, தமிழக முதல்வர் இ.பி.எஸ்., - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டார்.

இருமாநிலங்களிலும் ஏற்பட்ட புயல் சேத விவரங்களை கேட்டறிந்தார். இரண்டு மாநிலங்களுக்கும் தேவையான உதவிகளை, மத்திய அரசு வழங்கும் என, உறுதி அளித்தார்.கடலிலும் உயிரிழப்பில்லை!நிவர் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, நவ., 22 முதல், 26ம் தேதி வரை, இந்திய கடலோர காவப்படைக்கு சொந்தமான கப்பல்களும், ஹெலிகாப்டர்களும், கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நாட்களில், புயல் தொடர்பான எச்சரிக்கை, மீன்பிடிபடகுகளுக்கு தொடர்ந்து விடுக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக, 2,473 மீன்பிடி படகுகள் பாதுகாக்கப்பட்டு, கடலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என, இந்திய கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.

மூலக்கதை