இது உங்கள் இடம்: அதெல்லாம் ஒரு காலம்!

தினமலர்  தினமலர்
இது உங்கள் இடம்: அதெல்லாம் ஒரு காலம்!

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :


கு.காந்தி ராஜா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:சமீபத்திய பீஹார் சட்டசபைத் தேர்தல் மற்றும் பல மாநிலங்களில் நடந்த இடைத் தேர்தல்களின் முடிவு, காங்கிரஸ் செல்லாக் காசாகிவிட்டது என்பதை எடுத்துக் காட்டிஇருக்கிறது.

பீஹாரில், ஆர்.ஜே.டி.,யுடன் கூட்டணி அமைத்து, 75 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், வெறும், 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. உ.பி.யில் நடந்த, ஆறு சட்டசபை தொகுதிகளின் இடைத் தேர்தலில், காங்கிரஸ், ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை; நான்கு தொகுதிகளில், 'டிபாசிட்' பறி கொடுத்திருக்கிறது.

ம.பி.,யில், 28ல், ஏழு தொகுதிகளிலும்; குஜராத்தில் எட்டுக்கு, பூஜ்யம்; கர்நாடகாவில் இரண்டுக்கு, பூஜ்யம்; தெலுங்கானாவில் ஒன்றுக்கு, பூஜ்யம்; மணிப்பூரில் ஐந்துக்கு, பூஜ்யம் என்பது தான், காங்கிரசின், 'வெற்றி' பட்டியல். இப்படி நாட்டின் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, வடகிழக்கு என அனைத்து பகுதிகளிலும், காங்கிரஸ் பலத்த அடி வாங்கியிருக்கிறது. காங்கிரசின் படுதோல்வி, அதன் தலைவர்களுக்குள் காரசாரமான விவாதத்தை தோற்றுவித்திருக்கிறது.


காங்கிரசின் முன்னாள் மத்திய அமைச்சரான கபில் சிபல் உட்பட சிலர், உயர்மட்ட தலைமையை குறை கூறி வெளிப்படையாகவே அறிக்கை விட்டனர். அதோடு, இந்தத் தோல்வியின் எதிரொலியாக, வரும் தமிழக சட்டசபை தேர்தலிலும், தி.மு.க., கூட்டணியில், பேரம் பேசும் சக்தியை, காங்கிரஸ் முற்றிலுமாக இழந்துவிட்டிருக்கிறது

.இதனால், தமிழக காங்கிரஸ் கட்சி விவகாரங்களை கவனிக்கும், மேலிடப் பிரதிநிதியான தினேஷ் குண்டுராவ், 'கூட்டணியில் தொகுதி ஒதுக்குதல் தொடர்பாக, தி.மு.க.,விடம் எந்தப் பேரமும் பேச மாட்டோம்' எனக் கூறியுள்ளார். அதாவது, கொடுப்பதை பெற்றுக் கொள்வோம் என, சரணாகதி பத்திரத்தையே வாசித்து விட்டார்.

இது போன்றதொரு பரிதாப நிலை, காங்கிரசுக்கு என்றைக்கும் ஏற்பட்டதில்லை. கடந்த, 2011 தேர்தலின்போது, அறிவாலயத்தில், '2 ஜி' ஊழல் தொடர்பாக, சி.பி.ஐ. சோதனை நடக்கும்போதே, அதே அலுவலகத்தின் மேல் தளத்தில், காங்கிரசுக்கு, அபரிமிதமாக, 72 இடங்கள் அளித்து, கூட்டணி பேசி முடித்தார், கருணாநிதி.ஆனால், 2021 தேர்தலில், காங்கிரசுக்கு, 20 இடங்கள் அளித்தாலே அதிகம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

காங்கிரசின் தலைமை பதவிக்கு சோனியாவும், ராகுலும் வந்தபின், தேச நலன், உண்மையான மதசார்பின்மை, மக்கள் நலன் போன்ற விஷயங்கள் எல்லாம், காற்றில் பறக்கவிடப்பட்டன. மத பயங்கரவாத மற்றும் மதவெறி பிடித்த அடிப்படைவாத சக்திகளிடம், காங்கிரஸ் சரணடைந்துள்ளது.கட்சியில், தன் குடும்ப நலன்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதன் விளைவாகவே, காங்கிரஸ் இன்று இந்த மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால், சுதந்திரத்திற்குப் பின் காங்கிரசை கலைத்து விடலாம் என்ற, மஹாத்மா காந்தியின் விருப்பத்தை, சோனியாவும், ராகுலும் படிப்படியாக நிறைவேற்றி வருகின்றனர்.

மூலக்கதை