தடுப்பணையில் அணை கட்டுது குப்பை! இயற்கை ஆர்வலர்கள் கவலை

தினமலர்  தினமலர்
தடுப்பணையில் அணை கட்டுது குப்பை! இயற்கை ஆர்வலர்கள் கவலை

பெ.நா.பாளையம்:கணுவாய் தடுப்பணையில் பிளாஸ்டிக் குப்பை கொட்டுவதால், தடுப்பணை, அதன் தன்மையை இழந்து, விரைவில் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சின்னத்தடாகம் வட்டாரத்தில் பருவ காலங்களில் பெய்யும் மழைநீர், அங்குள்ள பெரும் பள்ளம் வழியாக வழிந்தோடி, சோமையம்பாளையம், கணுவாய் மேல் தடுப்பணை, கீழ் தடுப்பணைகளை நிறைப்பது வழக்கம்.
இதனால், நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், பன்னிமடை, சின்னத்தடாகம், அப்ப நாயக்கன்பாளையம் உட்பட கிராமங்களை சுற்றியுள்ள ஆழ்குழாய் கிணறு, திறந்தவெளிக் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் பெருகி, விவசாயம் மற்றும் பொது மக்களின் தண்ணீர் தேவைகளை நிறைவேற்றுவதாக இருந்தது.ஆண்டுதோறும் கணுவாய் பள்ளத்தின் வழியாக செல்லும், அதிகப்படியான நீரை திருப்பி சின்னவேடம்பட்டி குளத்தை நிரப்ப திட்டம் வகுக்கப்பட்டு, கடந்த, 35 ஆண்டுகளுக்கு முன்பு, கணுவாயிலிருந்து நில ஆர்ஜிதம் செய்யப்பட்டு, துடியலுார் வழியாக சின்னவேடம்பட்டி குளத்துக்கு ராஜ வாய்க்கால் வெட்டும் பணி நடந்து முடிந்தது. பருவகாலத்தில் பெய்யும் மழைநீர், கணுவாய் தடுப்பணையில் நுழையும் போது, அங்குள்ள சின்னவேடம்பட்டி கால்வாய்கான ஷட்டரை திறந்து நீர் வெளியேற்றப்படும். இதனால் வெள்ளக்கிணறு மற்றும் அதை சுற்றியுள்ள ஏராளமான விவசாய நிலங்கள் பயன் பெற்றன. ஆனால், தற்போது, இத்தகைய சிறப்பு வாய்ந்த கணுவாய் தடுப்பணையில், கடந்த சில நாட்களாக குப்பை கழிவுகளை கொட்டும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இதுகுறித்து, இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:இப்பகுதியிலுள்ள உள்ளாட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், கணுவாய் தடுப்பணையில் கொட்டப்படுகின்றன. இவைகளில் பெரும்பாலானவை பிளாஸ்டிக் கழிவுகள். இவை தடுப்பணையின் தன்மையை பாதிக்கக் கூடியதாக உள்ளது. பருவ காலங்களில் இத்தடுப்பணையில் நீர் நிறைந்தால், நிலத்தடி நீர்மட்டம் பெருகும்.
ஆனால், தடுப்பணையில் பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டுவதால், அதன் தன்மையை இழந்து, யாருக்கும் பயன்படாத சூழல் உருவாகியுள்ளது.இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இல்லாவிட்டால், இப்பகுதியில் ஒட்டுமொத்த விவசாயம் அழிவதோடு, நிலத்தடி நீர் வற்றி தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் ஏற்படலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மூலக்கதை