அதிகரித்த நாய்கள் தொல்லையால் தாங்க முடியல...கட்டுப்படுத்த பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தினமலர்  தினமலர்
அதிகரித்த நாய்கள் தொல்லையால் தாங்க முடியல...கட்டுப்படுத்த பொதுமக்கள் எதிர்பார்ப்பு

அனுப்பர்பாளையம்:திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தெரு நாய்கள் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அதனால், அவற்றை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தெரு நாய் பெருக்கம் அதிகரித்து விட்டது. இதனை கட்டுப்படுத்தும் வகையில், அவற்றுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து வந்தனர்.அறுவைச் சிகிச்சை செய்து, பராமரித்து மீண்டும் அதனை பிடிக்கப்பட்ட இடத்தில் கொண்டு விட ஒரு நாய்க்கு, மாநகராட்சி சார்பில், 440 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அதற்காகன டெண்டர், 2020 ஜனவரியுடன் நிறைவு பெற்றது. புதிய டெண்டர் விடப்படாததால், தற்போது நாய்களின் பெருக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து விட்டது. வீதிகள், ரோட்டின் மையத்தில் படுத்து கொள்வதால், டூவீலரில் செல்வோர் விபத்தை சந்திக்கின்றனர்.ரோட்டில் நடந்து செல்வோரை கடிப்பது. குழந்தைகளை துரத்துவது, இறைச்சிக்கடை உள்ள பகுதியில், உணவை தேடி அங்கும், இங்கும் ஓடுவது, என தொடர்ந்து நாய்கள், பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.குறிப்பாக, கூட்டமாக சேரும் நாய்கள், திடீரென்று, ரோட்டுக்கு குறுக்கும், நெடுக்கும் ஓடுவதால், பலரும் அலறியடித்து ஓடுகின்றனர். இதனால், பலரும் அவைகளிடம் 'கடி' வாங்கிய சம்பவம் நிறைய நடந்துள்ளது.எனவே, தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அவற்றுக்கு கு.க., செய்து கட்டுப்படுத்துமாறு, மாநகராட்சியில் பல பகுதிகளிலிருந்தும், பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நாய்களை பிடித்து அறுவை சிகிச்சை செய்து, அதனை ஒரு வாரம் பராமரித்து விட புதிதாக டெண்டர் விடப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் நாய் பிடிக்கும் பணி தொடரும். இதன் மூலம் நாய் கட்டுப்படுத்தப்படும்,' என்றார்.கொஞ்ச... நஞ்சமல்ல!கொரோனா ஊரடங்கில் இருந்தே, நாய்களின் தொல்லை கட்டுக்கடங்காமல் போய்விட்டது. குறிப்பாக, கோழி, மீன் கடைகள் அமைந்துள்ள பகுதியில், பெருங்கூட்டமாக சுற்றி திரிந்து பலரை கடித்து விடுகிறது.
அதிலும், குழந்தைகளை துரத்தி கடிப்பதும் நடந்துள்ளது. இதுதவிர, ரோட்டின் குறுக்கே திடீரென்று ஓடுவதால், டூவீலரில் செல்வோர், கை கால் முறிந்து படுகாயமும் அடைந்துள்ளனர்.
இதுதவிர, கார்களில் செல்வோரும், நாய்கள் குறுக்கே வந்தால், திடீரென்று வேகத்தை குறைக்கும்போது, தொடர்ந்து வாகனங்கள் விபத்தில் சிக்கியும் உள்ளன. மொத்தத்தில், நாய்கள் அதிகரிப்பால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென்பதே பலரது எதிர்பார்ப்பு.

மூலக்கதை