'எல்லையில் பிரச்னையை தீர்க்க இந்தியா - சீனா நேர்மையான பேச்சு'

தினமலர்  தினமலர்
எல்லையில் பிரச்னையை தீர்க்க இந்தியா  சீனா நேர்மையான பேச்சு

பீஜிங்:'லடாக்கில், படைகளை விலக்கி கொள்வது குறித்து, சீனாவும் இந்தியாவும், நேர்மையான முறையில் பேச்சு நடத்தி வருகின்றன' என, சீன ராணுவம் தெரிவித்து உள்ளது.

இந்தியா -- சீனா இடையே, கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைப் பகுதியில், மே மாதம் முதல், மோதல் போக்கு நிலவி வருகிறது. இதை கட்டுக்குள் கொண்டு வந்து, எல்லையில் பழைய நிலை திரும்ப, இருதரப்பு ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான, எட்டாவது சுற்று பேச்சு, சமீபத்தில் நடந்தது.

இந்நிலையில், எல்லையின் தற்போதைய நிலை குறித்து, சீன ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கர்னல் ரென் குவோக்வியாங் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

இருதரப்பு ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான, எட்டாவது சுற்று பேச்சுக்கு பின், இந்தியா -- சீனா எல்லையில், நிலைமை சீராக உள்ளது. இக்கூட்டத்தைத் தொடர்ந்து, இந்தியா -- சீனா எல்லையின் மேற்கு பகுதியில் உள்ள, உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில், படைகளை விலக்கிக் கொள்வதை ஊக்குவிப்பதற்காக, இரு நாடுகளும், நேர்மையான மற்றும் ஆழமான பேச்சு மற்றும் ஒருங்கிணைப்பை பராமரித்து வருகின்றன.

இரு நாட்டு தலைவர்களும் எட்டிய, முக்கியமான ஒருமித்த கருத்தை செயல்படுத்த, இரு தரப்பினரும் சம்மதித்து உள்ளனர். இந்தியாவுடன், ராணுவ மற்றும் துாதரக மட்டத்தில் பேச்சை தொடர, சீனா தயாராக உள்ளது. அதே நோக்கத்தை இலக்காக வைத்து, இந்தியாவும் செயல்படும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

எஸ்.சி.ஓ., கூட்டம் சீன பிரதமர் பங்கேற்பு


எஸ்.சி.ஓ., எனப்படும், ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் தலைவர்களின், 19வது கூட்டத்தை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, வரும், 30ல் இந்தியா நடத்துகிறது. இதில், சீன பிரதமர் லீ கேகியாங் பங்கேற்க உள்ளதாக, அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஸாவோ லிஜியான் நேற்று அறிவித்தார்.

மூலக்கதை