செம்பரம்பாக்கம் ஏரியில் இரவு நேரத்தில் 9 ஆயிரம் கன அடி திறப்பு தண்ணீர் திறப்பால்: அடையாற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ள நீர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
செம்பரம்பாக்கம் ஏரியில் இரவு நேரத்தில் 9 ஆயிரம் கன அடி திறப்பு தண்ணீர் திறப்பால்: அடையாற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ள நீர்

* அதிகபட்ச நீர்வரத்தால் திகைத்த அதிகாரிகள்
* மழை குறைந்ததால் தப்பித்த சென்னைவாசிகள்

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இரவு நேரத்தில் 9 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பால் அடையாற்றில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் அதிகாரிகள் திகைத்து போன நிலையில் மழை குறைந்ததால் நிம்மதி அடைந்தனர்.

நிவர் புயல் காரணமாக கடந்த 23ம் தேதி முதல் பெய்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரி நீர் மட்டம் வேகமாக நிரம்பியது. 24 அடி கொள்ளளவு கொண்ட ஏரியில் நேற்று காலை 9மணி நிலவரப்படி 21. 55 அடியாக இருந்தது.

தொடர்ந்து ஏரிக்கு வரும் நீர்வரத்து 4 ஆயிரம் கன அடியாக இருந்தது.

இதை தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து பிற்பகல் 12 மணியளவில் தண்ணீர் திறக்க போவதாக பொதுப்பணித்துறை அறிவித்தது.

இதை தொடர்ந்து அடையாற்று கரையோரப்பகுதிகளில் வசிக்கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். முதற்கட்டமாக நேற்று பிற்பகல் 12 மணியளவில் 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டன.

தொடர்ந்து பெய்த மழை காரணமாக ஏரிக்கு வரும் நீர்வரத்து 5 ஆயிரம் கன அடி, 7 ஆயிரம், 8,436 ஆயிரம் கன அடியாக படிப்படியாக அதிகரித்தது. இதனால், ஏரியின் நீர் மட்டம் 22. 07 அடியாக உயர்ந்தது.



இதை தொடர்ந்து ஏரியில் இருந்து நேற்று மாலை 4 மணியளவில் 3 ஆயிரம் கன அடி, மாலை 6 மணியளவில் 5 ஆயிரம் கன அடி, இரவு 8 மணியளவில் 7 ஆயிரம் கன அடி, இரவு 10 மணியளவில் 9 ஆயிரம் கன அடி வீதம் என படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டன. இதனால், அடையாற்றில் ஒரே நேரத்தில் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்றன.

இந்த நிலையில் ஒரே நேரத்தில் அதிகபட்சமான தண்ணீர் அடையாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதனால், கரையோரப்பகுதிகளில் சேதம் ஏற்படுகிறதா என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில், மழை குறைந்ததால், நள்ளிரவில் ஏரிக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக 5 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

இதை தொடர்ந்து, ஏரியில் இருந்து அந்த 5 ஆயிரம் கன அடி உபரி நீர் அப்படியே திறந்து விடப்பட்டன.

இந்த நிலையில், இன்று காலை 4 மணி நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து 4371 கன அடியாக குறைந்தது. ஆனாலும், 5016 கன அடி திறந்து விடப்பட்டது.

இதனால், ஏரியின் நீர் மட்டம் 21. 85 அடியாக குறைந்தது. இன்று காலை 6 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு 2 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

தொடர்ந்து 10 மணி நிலவரப்படி 1500 கன அடியாக நீர் வரத்து குறைந்தது. இதை தொடர்ந்த ஏரியில் நீர் திறப்பு 500 கன அடியாக திறக்கப்பட்டன.



இருப்பினும் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை அதிகாரிகள் ஏரிக்கு வரும் நீர்வரத்தை கண்காணித்து அதற்கேற்ப தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதிகபட்ச நீர்வரத்தால் திகைத்து போன அதிகாரிகள்: செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்றிவு 10 மணியளவில் திடீரென 8436 கன அடி வீதம் தண்ணீர் வந்தது.

இதை தொடர்ந்து ஏரியில் இருந்து 9 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டன. தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், ஏரிக்கு நீர் வரத்து அதிகரிக்குமோ என்கிற அச்சத்தில் அதிகாரிகள் இருந்தனர்.



இந்த நிலையில் இரவு நேரத்தில் அதிக பட்ச தண்ணீர் திறக்கப்பட்டால் கடலில் கலப்பது சிரமம். மீண்டும் தண்ணீர் திரும்பும் பட்சத்தில் கரை உடைப்பு ஏற்பட்டு பெரிய அளவில் பாதிக்க கூடும்.

ஆனால், நீர்வரத்து குறைந்ததால் அதிகாரிகள் தண்ணீர் திறப்பதை குறைத்து நிலைமையை சமாளித்தனர்.

.

மூலக்கதை