மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து; நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் எல்லைகளுக்கு ‘சீல்’ வைப்பால் பதற்றம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து; நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் எல்லைகளுக்கு ‘சீல்’ வைப்பால் பதற்றம்

புதுடெல்லி: வேளாண் சட்டங்களை எதிர்த்து இன்றும், நாளையும் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதால், மாநில எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து பாரதிய கிசான் யூனியனின் சார்பில் பல்வேறு விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

தலைநகரை இணைக்கும் ஐந்து நெடுஞ்சாலைகள் வழியாக ‘டெல்லி சலோ’ பேரணிக்கு இன்று விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இப்போராட்டம் இன்றும், நாளையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

சண்டிகர் - டெல்லி நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்காக அரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகள் தேசிய தலைநகருக்குச் செல்ல தங்கள் கிராமங்களிலிருந்து வந்துகொண்டிருப்பதால் பாதுகாப்புப் பணியாளர்கள் ஏராளமானோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் விவசாயிகளின் போராட்ட அழைப்புக்கு முன்னதாக சட்டம் ஒழுங்கை உறுதி செய்வதற்காக அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரின் அறிவுறுத்தலின்படி சில நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து தடுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தை நடத்த விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.



இருப்பினும், ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், விவசாயிகளைக் கலைக்கவும் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளின் போராட்டத்தை கட்டுப்படுத்த டெல்லி - அரியானா எல்லையில் போலீசார் பாதுகாப்பை கடுமையாக்கி சீல் வைத்து உள்ளனர்.

பஞ்சாபில் இருந்து சுமார் 50 டிராக்டர்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி நேற்றிரவு முதல் புறப்பட்டனர். ஆனால் எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் டெல்லி வடக்கு எல்லையில் நுழைய முடியவில்லை.

இதுகுறித்து டெல்லி காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘தலைநகருக்கு போராட்டம் நடத்த வருவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

இருந்தாலும், விவசாய அமைப்புகள் ெடல்லியின் புறநகர் பகுதியில் உள்ளதால் போராட்டம் கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

டெல்லி மெட்ரோ நிர்வாகத்தின் கூற்றுப்படி, இன்று முக்கிய இடங்கள் வழியாக செல்லும் ரயில் சேவைகள் காலை முதல் நண்பகல் வரை பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ெடல்லி தவிர மற்ற மாநிலங்களில் வங்கி பணியாளர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.   அவர்கள், வங்கிகளுக்கான இருப்பு தொகைக்கான வட்டி விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும்.

அதற்கான சேவை கட்டணங்களை குறைக்க வேண்டும், போதிய பணியமர்த்தல், வங்கி தனியார் மய எதிர்ப்பு மற்றும் ஒப்பந்த நடைமுறை எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி உள்ளனர்.

அனைத்து இந்திய மின் துறை ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.   பல மாநிலங்களில் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்களும் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இதற்காக மத்திய வர்த்தக அமைப்புகள் போஸ்டர்கள், துண்டு பிரசுரங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு தனிப்பட்ட மற்றும் மாநில அமைப்புகளுடன் இணைந்து வினியோகித்துள்ளன.

இந்த நாடு தழுவிய பொது வேலைநிறுத்த போராட்டத்தில் மத்திய மற்றும் மாநில அமைப்புகளை சேர்ந்த 25 கோடி தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

.

மூலக்கதை