கல்பாக்கத்தில் கரையை கடந்தது நிவர்; கிராமங்கள் துண்டிப்பு: 20 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மூழ்கின

தமிழ் முரசு  தமிழ் முரசு
கல்பாக்கத்தில் கரையை கடந்தது நிவர்; கிராமங்கள் துண்டிப்பு: 20 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மூழ்கின

மரக்காணம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே இன்று அதிகாலை நிவர் புயல் வலுவிழந்து கரையை கடந்தது. அப்போது, சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.

ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

வங்கக்கடலில் கடந்த 16ம் தேதி கன்னியாகுமரிக்கு தென் கிழக்கில், இலங்கைக்கு கிழக்கில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது படிப்படியாக வலுப்பெற்று நிவர் புயலாகவும், நேற்று மாலை அதிதீவிர புயலாகவும் உருவெடுத்தது.

காரைக்கால் - மரக்காணத்திற்கு இடையே கரையை கடக்கும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.

பின்னர் கடலூர், புதுச்சேரி, மரக்காணத்திற்கு இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இந்த புயலால் கடற்கரையை ஒட்டிய பகுதியில் மிகப்பெரிய பாதிப்பு இருக்கும் என எச்சரிக்கப்பட்டதை தொடர்ந்து கடலூர், புதுச்சேரி, மரக்காணம் பகுதிகளில் இரு மாநில அரசுகளும் கடந்த 2 தினங்களாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். துறைமுகங்களில் 10ம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டது.

புதுச்சேரி, மரக்காணத்திற்கு இடையில் புயல் கடக்கும் என்று இறுதி எச்சரிக்கை விடப்பட்டதால், அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேரில் சென்று பணிகளை பார்வையிட்டார்.



மரக்காணம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையிலான அதிகாரிகள் முன்னேற்பாடுகளை துரிதப்படுத்தினர். தாழ்வான இடத்தில் இருந்த பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர்.

புயல் தாக்கினால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பொதுமக்கள், கால்நடைகளை பாதுகாக்க தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று காலை முதல் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. நிவர் புயல் தரைப்பகுதி நோக்கி வரவர கனமழை கொட்டித் தீர்த்தது.

வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியது போல், நேற்று மாலை முதல் மணிக்கு 80கி. மீ. , வேகத்தில் சூறைக்காற்று வீசியது.

இரவு நேரத்தில் காற்றின் வேகம் கூடுதலானது.

நள்ளிரவு 12. 30 மணிக்கு மேல் புயலின் கோரத்தாண்டவம் அதிகரித்தது. இதன் பின்னர் நிவர் புயல் இன்று அதிகாலை 2. 30 மணிக்கு மரக்காணம் அருகே கல்பாக்கத்தில் கரையை கடந்தது.

கரையை கடக்கும் போது, மணிக்கு சுமார் 145 கி. மீ. , வேகத்தில் சூறைக்காற்று வீசியதால் பலத்த சேதம் ஏற்பட்டது. ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்தன.

வீட்டின் கூரைகள் பறந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன.

மரக்காணம் திண்டிவனம் சாலையில் மேட்டு தெரு பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதில், பல மின்கம்பங்கள் உடைந்தன.



இசிஆர் சாலையில் மண்டவாய், கீழ்ப்பேட்டை, அனுமந்தை ஆகிய பகுதிகளிலும் மரங்கள் விழுந்தன. எக்கியர்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ராயநல்லூர், ஆலத்தூர், அசப்பூர், நல்லம்பாக்கம், காணிமேடு ஆகிய கிராமங்கள் வழியாக செல்லும் ஓங்கூர் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக ராணிமேடு கிராமத்திற்கும் மண்டகப்பட்டு கிராமத்திற்கும் இடையே கட்டப்பட்ட தரைப்பாலம் முற்றிலும் மூழ்கியது.

சுமார் 4 அடிக்கு மேல் வெள்ள நீர் செல்வதால், அவ்வழியாக செல்லும் சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், மரவள்ளி, மணிலா போன்ற பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

பாதிக்கப்பட்ட இடங்களை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

கடலூர்
கடலூர் மாவட்டத்தில் 49 கடற்கரை கிராமங்கள் உள்ளன. நிவர் புயலின் தாக்கம் காரணமாக நேற்று பிற்பகல் முதல் கடலூரில் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருந்தது.

5 மீட்டர் உயரத்துக்கு மேல் அலைகள் எழுந்து ஆர்ப்பரித்தது. சொத்திகுப்பம், ராசாபேட்டை, புதுக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் மீனவர்கள் அச்சமடைந்தனர்.

புயல் கரையை கடந்த நிலையில் நேற்றிரவு பலத்த மழையுடன் காற்று வீசியது. கடலூரில் அதிகபட்சமாக 25 செ. மீ.

மழை பெய்தது. கடலூரில் 40க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன.

வண்டிப்பாளையம் - கேப்பர் மலை செல்லும் சாலையில் தண்ணீர் தேங்கியது. கடலூர்- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில்

சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்தது.
பரங்கிப்பேட்டை, மடவாப்பள்ளம், பிச்சவாரம், சின்னூர், முடசல்ஓடை உள்ளிட்ட 15க்கும் அதிகமான கடலோர கிராமங்களில் தென்னை மரங்கள் காற்றில் சாய்ந்தன.

பண்ருட்டி அருகே புலவனூர் கிராமத்தில் இருந்த வாத்துபட்டியில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாத்துகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கின.

கண்டக்கோட்டை கிராமம் உள்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியது.
புதுச்சேரியில் பாதிப்பு குறைவாக இருந்தாலும், பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

முக்கிய சாலைகளில் ஆறுபோல் வெள்ளம் ஓடுகிறது.

கடந்த 2, 3 நாட்களாக சீற்றத்துடன் காணப்பட்ட கடல் தற்போது அமைதியாக உள்ளது. படகுகள் ஏற்கனவே பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.

இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களும் சேதம் அதிகம் இல்லாத காரணத்தால் தங்களது கிராமங்களுக்கு இன்று காலை சென்று விட்டனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் எல்லாம் சேத விவரங்களை அதிகாரிகள் முழுமூச்சுடன் சேகரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், கரையை கடந்த புயல் 6 மணி நேரத்துக்குப் பிறகு காற்று முறிவு காரணமாக இரண்டு பிரிவாக பிரிந்து வலுவிழக்கத் தொடங்கியது. அதில் ஒரு பிரிவு கடலூர் பகுதியிலும், ஒரு பிரிவு வட மாவட்டங்களான கூவத்தூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், வந்தவாசி, வேலூர், ஆரணி வழியாக கடந்து செல்கிறது.

இதனால் இந்த பகுதிகளில் தொடர்ந்து மழை கொட்டியது. இன்று மாலைக்குப் பிறகு இந்த புயல் மேலும் வலுவிழந்து சாதாரண புயலாக ஆந்திரா எல்லைக்குள் செல்கிறது.

இந்தப் புயல் கரை கடந்ததில் தாம்பரத்தில் 31 செ. மீ. மழை கொட்டித் தீர்த்தது.

.

மூலக்கதை