2019ஆம் ஆண்டின் நோபல் பரிசு - விஞ்ஞானிகளின் விபரம்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

உலகின் மிகப் பெரிய விருதாக் கருதப்படும் நோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்தவர்களுக்காக வழங்கப்படுகிறது. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் நோபெல் என்பவரால் 1895ல் தொடங்கப்பட்டது. 1901 முதல் முறையாக இந்தப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. சில ஆண்டுகள் ஒரு பரிசு கூட அறிவிக்கப்படாமல் போனதும் உண்டு. எனினும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசு அறிவிக்கப்படும். உலகப் போர்கள் நடந்து வந்தக் காலங்களில் ஆறு ஆண்டுகள் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து 1935 ஆம் ஆண்டு தகுதியான ஆட்கள் யாரும் இல்லை என்ற காரணத்தினால் பரிசு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.நோபல் பரிசு, திரும்பப் பெறத்தக்கதல்ல.

நோபல் பரிசு ஒவ்வொரு வருடமும் ஆறு துறைகளுக்கு அளிக்கப்படுகிறது. இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், அமைதி மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனைப் புரிந்தவர்களுக்கு கௌரவிக்கும் வகையில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் வழங்கப்படுகிறது. மேலும் மற்ற அனைத்து விருதுகளும் ஸ்வீடனின் தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரில் வழங்கப்படும். நோபல் அமைப்பில் பரிசுகளை தேர்வு செய்யும் குழுவில் பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததால் சென்ற ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட வில்லை எனவே சென்ற ஆண்டுக்கான விருதும் சேர்ந்து இந்த ஆண்டில் வழங்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டிற்கான இலக்கிய நோபல் விருது போலந்து நாட்டைச் சேர்ந்த ஓல்கா டோகார்ஸுக்கிற்கு வழங்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டிற்கான இலக்கிய நோபல் பரிசு பீட்டர் ஹேண்ட்கேவிற்கு வழங்கப்பட்டது.

இலக்கியம்:

- போலந்து நாட்டைச் சேர்ந்த 57 வயதான எழுத்தாளர் ஒல்கா எழுதிய 'ப்ஃளைட்' என்னும் படைப்புக்காக கடந்த ஆண்டு புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டில் இவர் எழுதிய மத்திய ஐரோப்பா பற்றிய தொகுப்புகளின் எழுத்து நடைக்கும், கோணத்திற்கும் இந்த அங்கீகாரம் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- 76 வயதான ஆஸ்திரிய நாடக ஆசிரியரும், நாவல் ஆசிரியருமான பீட்டருக்கு "மொழியியல் புத்தி கூர்மையின் மூலம் மனித அனுபவத்தின் தனித்துவத்தை ஆராய்ந்த ஒரு சிறப்புமிக்க படைப்புக்காக" நோபல் பரிசு வழங்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் திரைக்கதை எழுதுவது மட்டுமல்லாமல் `தி லெஃப்ட் ஹேண்டட் வுமன்' (The Left-Handed Woman), `தி ஆப்சன்ஸ்' ( The Absence) போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். 'காப்கா' விருது உட்பட இலக்கியத்துக்காக பல விருதுகளை வென்றுள்ளார் பீட்டர் ஹேண்ட்கே.

வேதியியல்:

இந்த ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு ஜான் பி குட்எனஃப் (ஜெர்மனி), ஸ்டான்லி விட்டிகாம் (பிரிட்டன்), அகிரா யோஷினோ (ஜப்பான்) மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 97 வயதான விஞ்ஞானி 'ஜான் குட்எனஃப்' என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை "லித்தியம் அயன் பேட்டரியை" கண்டுபிடித்ததற்காக இவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி மூலம் மொபைல், மடிக்கணினிகள் மற்றும் மின்சார வாகனங்கள் உள்ளிட்ட பலவற்றையும் நெடுநேரம் வரை இயக்க முடியும்.

இயற்பியல்:

இந்த ஆண்டின் இயற்பியல் துறைக்கான பிரிவில் நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது பேரண்டம் குறித்த ஆய்வுக்காக ஜேம்ஸ் பீப்பிள்ஸ் மற்றும் சூரிய குடும்பத்திற்க்கு வெளியே உள்ள கோள்கள் குறித்த ஆய்வுக்காக மிச்செல் மேயர் மற்றும் டிடியர் குயல்ஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் சுவிட்சர்லாந்து மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானிகள்.

மருத்துவம்:

இந்த ஆண்டின் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு வில்லியம் ஜி.கெலின், சர் பீட்டர் ஜெ.ராட்க்ளிஃப் மற்றும் கிரெக் எல்.செமன்சாகி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. மனித உடலில் இருக்கும் செல்கள் எவ்வாறு ஆக்சிஜனை உணர்ந்து கொள்கிறது என்றும் இதனை எவ்வாறு பகிர்ந்து கொள்கின்றது என்றும் இவர்கள் மூவரும் நடத்திய ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் கேன்சர் சிகிச்சைக்கு இந்த ஆராய்ச்சி உதவும் என்று கூறுகிறார்கள்.

அமைதி:

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு 'எத்தியோப்பியா' நாட்டின் பிரதமர் அபய் அகமது அலிக்கு வழங்கப்பட்டுள்ளது. அண்டை நாடான எரித்திரியா எல்லை பிரச்சனையில் அமைதியான முறையில் தீர்வு கண்டதால் இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது. பரிசு தொகை 9 லட்சத்து 14 ஆயிரம் டாலர் அதாவது இந்திய மதிப்பில் (சுமார் ரூ 6 கோடியே 40 லட்சம்) ரொக்கம், ஒரு தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவை கொண்டதாகும்.

மூலக்கதை