ரூ. 1000 கோடியில் கள்ளக்குறிச்சியில் கால்நடைப்பூங்கா அமைக்கப்பட உள்ளது: உயர்ரக பசுக்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் முதல்வர் பழனிசாமி

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

ரூ. 1000 கோடியில் கள்ளக்குறிச்சியில் கால்நடைப்பூங்கா அமைக்கப்பட உள்ளது: உயர்ரக பசுக்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் முதல்வர் பழனிசாமி
     சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகச் சென்னையில் கொரோனா பரவல் குறையத் தொடங்கிய நிலையில் மற்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை கூடி வருகிறது. கொரோனா தடுப்பு, வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்துக் கடந்த சில நாட்களாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெல்லை, திண்டுக்கல், மதுரை போன்ற பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ரூ. 25 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மலைவாழ் உறைவிட பள்ளி கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார். அப்போது கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, “கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொருத்தவரைக்கும் வைரஸ் பரவல் தடுப்பு சிறப்பான முறையில் நடைபெற்று இன்றைக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. உலக நாடுகள் அச்சத்தில் உறைந்து போய் இருக்கின்ற இந்த தருணத்தில் தமிழகத்திலும் இந்த கொரோனா வைரஸ் பரவி இயல்புநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக அரசு அறிவிக்கின்ற ஆலோசனையை நம் மாவட்ட நிர்வாகம் சிறப்பான முறையில் பின்பற்றி வைரஸ் பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியம் என்பதை இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகின்றேன். விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தைப் பிரதானமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு சட்டத்துறை அமைச்சர் வேண்டுகோளுக்கு இணங்க ஏழை எளிய மக்களின் நன்மைக்காக மாவட்டம் தோற்றுவிக்கப்பட்ட ஆறே மாதத்தில் புதிதாக ஒரு மருத்துவக் கல்லூரி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமையவுள்ளது. இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு என்றார். மேலும் ஊட்டியில் ரூ. 48 கோடியில் கால்நடை விந்தணு ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட உள்ளது. கால்நடைப்பூங்கா மூலமாக உயர்ரக பசுக்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். ரூ.1000 கோடியில் கள்ளக்குறிச்சியில் கால்நடைப்பூங்கா அமைக்கப்பட உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை