கோவில்களில் முத்தக்காட்சி: நெட்பிளிக்ஸ் மீது வழக்குப்பதிவு

தினமலர்  தினமலர்
கோவில்களில் முத்தக்காட்சி: நெட்பிளிக்ஸ் மீது வழக்குப்பதிவு

போபால்: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான வெப் சீரிஸில் கோவிலில் முத்தக்காட்சி இடம்பெற்றதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் மற்றும் இயக்குநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களுக்கு தணிக்கை தேவையில்லை. இதன்காரணமாக சில படங்கள் மற்றும் சீரிஸ்களில் பிறரை இழிவுப்படுத்துவது போலவோ அல்லது ஆபாசமாகவோ சில வசனங்கள், காட்சிகள் வெளிப்படையாக இடம்பெற்றன. ஓடிடி தளங்களில் வெளியாகும் சில சீரிஸ்கள் மதம், சமுதாயம் போன்ற விஷயங்களை தவறாக சித்தரிப்பதாக கூறி சர்ச்சைக்கு உள்ளானது. இந்நிலையில், பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் 'எ சூட்டபிள் பாய்' (A Suitable Boy) என்ற பெயரில் வெளியான தொடர், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விக்ரம் சேத் எழுதிய எ சூட்டபிள் பாய் என்கிற நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் இணையத்தொடரை மீரா நாயர் இயக்கியுள்ளார். இத்தொடர் கடந்த 23ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இஷான் கட்டர், தபு, தன்யா, ரசிகா போன்றோர் நடித்துள்ளனர். இந்த தொடரில் கதாநாயகன் இஸ்லாமிய கதாபாத்திரமாகவும், நாயகி இந்து கதாபாத்திரமாகவும் நடித்துள்ளனர். ஒரு காட்சியில் கதாநாயகன் மற்றும் நாயகி, இருவரும் கோயிலில் முத்தமிடுவது போன்ற காட்சியமைக்கப்பட்டுள்ளது.

இந்த காட்சி மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தைப் புறக்கணிப்போம் எனச் சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து #BoycottNetflix என்கிற ஹேஷ்டேக்கை டுவிட்டரில் டிரெண்டும் ஆக்கினர். இதையடுத்து இணையத் தொடரை உருவாக்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறியுள்ளார். மத்தியப் பிரதேசத்தின் மகேஷ்வர் நகரில் உள்ள கோயிலில் இக்காட்சி படமாக்கப்பட்டுள்ளதால் இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பி.டி.ஐ., செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், மத உணர்வுகளை புண்படுத்தியதாக மத்திய பிரதேசத்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் மற்றும் நெட்பிளிக்ஸ் இயக்குநர் அம்பிகா குரானா ஆகியோர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா (பி.ஜே.ஒய்.எம்) தேசிய செயலாளர் கவுரவ் திவாரி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மூலக்கதை