நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை கட்டணத்தை ரூ.400 ஆக ஏன் நிர்ணயம் செய்யக் கூடாது ? : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

தினகரன்  தினகரன்
நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை கட்டணத்தை ரூ.400 ஆக ஏன் நிர்ணயம் செய்யக் கூடாது ? : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி, நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை கட்டணத்தை ஒரே மாதிரியாக நிர்ணயம் செய்ய வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.கொரொனா பரிசோதனை மேற்கொள்வதற்காக நாடு முழுவதும் உள்ள ஆய்வுக் கூடங்களில் வெவ்வேறு விதமான கட்டணங்கள் வசூல் செய்யப்படுகிறது. இது வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் நாடு முழுவது ஒரே மாதிரியான தொகையான ரூ.400 மட்டுமே கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என வழக்கறிஞர் விஜய் அகர்வால் என்பவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.இதையடுத்து மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வாதத்தில்,\' நாடு முழுவதிலும் ஒவ்வொரு இடங்களிலும் வெவ்வேறான கட்டணங்கள் கொரோனா பரிசோதனைக்காக வசூலிக்கப்படுகிறது. இது மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் முறைகேடுகளுக்கும் வழிவகுக்கிறது எனவே நாடு முழுவதும் ஒரே மாதிரியான கட்டணம் ரூ.400யை நிர்ணையம் செய்து நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து அவரது கோரிக்கை மற்றும் மனுவை விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், இதுகுறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கை ஒத்திவைத்து நேற்று உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை