பலத்த சேதம் ஏற்படும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்; நிவர் புயல் சூப்பர் புயலாக மாறும்: விடிய விடிய கரையைக் கடக்கும்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பலத்த சேதம் ஏற்படும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்; நிவர் புயல் சூப்பர் புயலாக மாறும்: விடிய விடிய கரையைக் கடக்கும்

சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இருந்து தமிழக கடலோரப் பகுதிக்கு நெருங்கி வரும் நிவர் புயல் இன்று மாலை மேலும் தீவிரம் அடைந்து ‘சூப்பர் புயலாக’மாறுகிறது. மணிக்கு 7 கிமீ வேகத்தில் நகரும் தன்மை கொண்டு இருப்பதால் இரவு தொடங்கி விடிய விடிய இந்த புயல் கரையைக் கடக்கும்.

இதனால் மிக மிக கனத்த மழை பெய்யும், பலத்த காற்று வீசும் என்பதால் பெரும் சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுகள் எச்சரித்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் தீவிரம் அடைந்து தற்போது நிவர் புயலாக மாறியுள்ளது.

அந்த புயல் கடலூருக்கு கிழக்கு மற்றும் தென் கிழக்கு திசையில் 250 கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையில் 300 கிமீ தொலைவிலும், சென்னைக்கு  தென் கிழக்கே 350 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.   நேற்றைய கணிப்பின் படி அடுத்த 12 மணி நேரத்தில் இந்த புயல் தீவிரம் அடையும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று நிவர் புயல் மேலும் தீவிரப் புயலாக மாறியுள்ளது.

இந்த வானிலை நிகழ்வின் காரணமாக நேற்று முதல் தமிழக கடலோரப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில்  கனமழை பெய்தது. இதையடுத்து அனைத்து துறைமுகங்களிலும் புயல் நெருங்கி வந்துள்ளதை காட்டும் வகையில் எச்சரிக்கை கூண்டு எண் 3 முதல் 6ம் எண் கூண்டுகள் ஏற்றப்பட்டன.

நேற்றைய நிலவரப்படி புயல் கடலோரப்பகுதியில் நிலை கொண்டதால், கடலில் சீற்றம் அதிகமாக இருந்தது. மாமல்லபுரம் உள்ளிட்ட சில இடங்களில் கடல் நீர் தரைப்பகுதிக்குள் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது.

இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு முழுவதும் கடலோர மாவட்டங்களில் பலத்தமழை பெய்தது. இதையடுத்து,  இன்று மாலை நிவர் புயல் காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தாலும், குறிப்பாக புதுச்சேரியை ஒட்டிய நிலப்பகுதி வழியாக கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிவர் புயல்,  மணிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் தன்மை கொண்டிருப்பதால் இன்று இரவு சூப்பர் புயலாக மாறி கரையை கடக்க துவங்கும்.

நகரும் தன்மை குறைவாக இருப்பதால் உடனடியாக இந்த புயல் கரையை கடந்து விடாது. இன்று இரவு விடிய விடிய மெதுவாக நகர்ந்து தான் கரையை கடக்கும்.

குறிப்பாக 30 கிலோ மீட்டர் தாண்டுவதற்கு 10 மணிநேரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பலத்த மழை, காற்று விடிய விடிய நீடிக்கும்.

நாகப்பட்டினம், வேதாரண்யம், மயிலாடுதுறை, காரைக்கால், புதுச்சேரி மற்றும் மாமல்லபுரம் பகுதியில் பெருத்த சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதைபோல் உள்மாவட்டங்களில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் பலத்த சேதம் ஏற்படும்.

அப்பகுதியில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு இடங்களுக்கு நகர்ந்து செல்ல வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும் போது 145 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிவர் புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, மன்னார் வளைகுடா, ஆந்திரா உள்ளிட்ட கடல் பகுதிகளில் இன்று இரவு வரை கடலில் கொந்தளிப்பு மற்றும் சீற்றம் காணப்படும்.

புயல் கரையை கடக்கும்போது காற்று வேகமாக வீசும் என்று கூறுவதால் ஆபத்தை தவிர்க்க பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

அதன்படி அயனாவரம் பகுதியில் 105 மி. மீ, எழும்பூர் 137. 80மி. மீ, கிண்டி 143. 20 மி. மீ, மாம்பலம் 136. 20மி. மீ, மயிலாப்பூர் 140. 60மி. மீ, பெரம்பூர் 104. 30, புரசைவாக்கம் 148. 20, தண்டையார் பேட்டை 113, ஆலந்தூர் 119. 60, அம்பத்தூர் 110, சோழிங்கநல்லூர் 145 மி. மீ வரை மழைபெய்துள்ளது. மேலும் நிவர் புயல் கரையைக் கடக்கும் போது, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் காரைக்கால், புதுச்சேரியிலும் குடிசை வீடுகளின் கூரைகள், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ஷெட்களின் மேற்கூரைகள், தகடுகள், ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள் காற்றில் அடித்துச் செல்லப்படும்.

பழைய வீடுகளும் இடிந்து விழும். மின் சாரக் கம்பங்–்கள், தொலைத் தொடர்பு கோபுரங்கள், கம்பங்கள், சாய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.



பழைய சாலைகள், மண் சாலைகள், பலமிழந்துள்ள பாலங்கள் கடுமையாக பாதிக்கப்படும். விளை நிலத்தில் உள்ள பயிர்கள், தென்னை மரங்கள், மற்ற மரங்கள், பனை மரங்கள், காற்றின் வேகத்தில் சாய்ந்து விழும் நிலை ஏற்படும்.

இதே போன்ற பாதிப்புகள் திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, புயல் பாதிப்பு அதிகம் ஏற்படும் இடங்–்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ள பகுதிகளில் அரசு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சார்பிலும், வருவாய்த்துறை சார்பிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன.

புயலில் இருந்து மக்களை மீட்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தாழ்வானப் பகுதிகளில் இருந்த மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் இன்று காலையில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலையில் பெரும்பான்மையான இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்தது.



இன்று அரசு பொது விடுமுறை விட்டதால், சாலைகளில் வாகனங்கள் செல்லவில்லை. வெறிச்சோடி காணப்பட்டன.

ஆனால் சென்னையில் விடிய விடிய மழை கொட்டியது. காற்றும் வேகமாக வீசியது.

பல இடங்களில் பொருட்கள் பறந்து செல்வதை காண முடிந்தது. சென்னையில் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்ற மாநகராட்சி உத்தரவிட்டது.

இதனால் பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டன.

நிவர் புயலால் பெரிய அளவில் சேதம் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளதால், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

.

மூலக்கதை