22 அடியை எட்டியதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கனஅடி தண்ணீர் திறப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
22 அடியை எட்டியதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கனஅடி தண்ணீர் திறப்பு

* அடையாற்று கரையை ஒட்டி தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றம்
* இன்று மாலை 4 ஆயிரம் கன அடியாக திறக்க வாய்ப்பு
* கரையோர பகுதிகளை கண்காணிக்க அறிவுரை

சென்ைன: செம்பரம்பாக்கம் ஏரி 22 அடியை எட்டியதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டன. தொடர்ந்து, இன்று மாலை 4 ஆயிரம் கன அடியாக திறக்க வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக அடையாற்று கரையை ஓட்டி தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து கரையோரபகுதிகளை கண்காணிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் உட்பட பல மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு முதலே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த மழை காரணமாக சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல் சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது.

குறிப்பாக, 3231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 1841 மில்லியன் கன அடியாகவும், 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 186 மில்லியன் கன அடியாகவும், 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2503 மில்லியன் கன அடியாகவும், 3645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 2999 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

இந்த ஏரிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், கடந்த 2015ம் ஆண்டு டிசம்பரில் பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதால், இரவோடு, இரவாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதன் காரணமாக, அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதன் காரணமாக, ஆயிரக்கணக்கானோர் உடைமைகளை இழந்தனர்.

பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.



இதனால், ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையின் போது கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தாலே பொதுமக்கள் பலரும் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விடுவார்களோ என்கிற அச்சம் அவர்கள் மத்தியில் உள்ளது. இந்த சூழலில் நிவர் புயல் காரணமாக பெய்து வரும் மழையால், இன்று காலை 6 மணி நிலவரப்படி 24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 21. 55 அடியாக எட்டியது. இந்த ஏரிக்கு இன்று காலை 6 மணி நிலவரப்படி 1096 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நேற்று இரவு முதல் பெய்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 4027 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில்  செம்பரம்பாக்கம் ஏரி 22 அடி எட்டியதை தொடர்ந்து இன்று பிற்பகல் 12 மணியளவில் 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதாக பொதுப்பணித்துறை அறிவித்தது.



மேலும், நீர்வரத்துக்கேற்ப படிப்படியாக நீர்வெளியேற்றம் உயர்த்தப்படும் என்பதால், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை சார்பில், மாநகராட்சிக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் வேண்டுகோள் விடுத்தது. இதை தொடர்ந்து, அடையாற்றை ஓட்டி வசிக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சி பகுதிகளில் அடையாற்றை ஒட்டியுள்ள சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், ஈக்காட்டு தாங்கல், மணப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 200 குடும்பங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு அவர்கள் மாநகராட்சிபள்ளி, சமூக நலக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.



அதே போன்று மணப்பாக்கம், திருநீர்மலை, அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களும் அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் ஏரியின் பாதுகாப்பு கருதி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதற்கட்டமாக இன்று பிற்பகல் 12 மணிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டன.

தொடர்ந்து, இன்று மாலைக்குள் 4 ஆயிரம் கனஅடி வரை திறக்கப்படுகிறது. தற்போதைய நிலையில், அடையாற்றில் 50 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் அச்சப்படத்தேவையில்லை. இருப்பினும் பாதுகாப்பாக இருப்பது அவசியம் என்று அதிாரிகள் தெரிவித்துள்ளனர்.   இந்த நிலையில், அடையாற்றில் 120 ஏரிகளில் இருந்து உபரி நீர் வருவதாலும், மணப்பாக்கம், திருநீர்மலை, ஈக்காட்டுதாங்கல், கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாய்க்கால்வாய்களில் இருந்து வரும் உபரி நீர் காரணமாக இன்று காலை நிலவரப்படி 15 ஆயிரம் கன அடி வரை அடையாற்றில் தண்ணீர் சென்றன.



இந்த  நிலையில் தொடர்ந்து இன்று காலை முதல் நாளை காலை 6 மணி வரை செம்பரம்பாக்கம் ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் 20 செ. மீ மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக மத்திய நீர்த்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் உபரி நீரை அப்படியே திருப்பி விடும் நிலை உள்ளதால், அதிகபட்ச உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளது.

எனவே, அடையாற்றில் கரையோர பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அடையாற்று முகத்துவாரம் பகுதிகளில் தண்ணீர் செல்ல வசதியாக தூர்வாரும் பணி தொடர்ந்து மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செம்பரம்பமாக்கம் ஏரியில் கடைசியாக கடந்த 2015ம் ஆண்டு தான் 30 ஆயிரம் கனஅடி தன்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு தற்போது தான் தண்ணீர் திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



இரவில் தண்ணீர் திறப்பால் சிக்கல்
கடந்த 2015ல் செம்பரம்பாக்கம் ஏரியில் இரவோடு, இரவாக 30 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த சமயத்தில் கடலின் நீர் மட்டம் அதாவது ஹைடை நிலை காரணமாக கடல் அலை மேலே எழும்பும்.

இந்த மாதிரியான சூழலில் முகத்துவாரம் வழியாக தண்ணீர் எளிதாக செல்ல முடியாது. எனவே, மக்கள் நலன் கருதி பகல், மாலை நேரங்களில் அதிக அளவில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிநீர் தேவை எனக்காரணம் காட்டி தண்ணீர் தேக்கி வைத்திருந்தால் பல்வேறு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், கடந்த2015ல் ஏற்பட்டது போன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று பொதுப்பணித்துறை மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

.

மூலக்கதை