ஐசிசி விருது பரிந்துரை பட்டியல் 4 பிரிவுகளில் கோஹ்லி

தினகரன்  தினகரன்
ஐசிசி விருது பரிந்துரை பட்டியல் 4 பிரிவுகளில் கோஹ்லி

துபாய்: ஐசிசி விருதுக்கான பரிந்துரை பட்டியலின் 4 பிரிவுகளில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி இடம் பிடித்துள்ளார். உலக கிரிக்கெட்டில் கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக விளையாடிய கிரிக்கெட் விரர், வீராங்கனைகளில் ‘தலைமுறையின் சிறந்த வீரர் விருது’க்கு தேர்வு செய்வதற்கான பட்டியலை  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பரிந்துரை செய்துள்ளது. டெஸ்ட், ஒருநாள், டி20ல் சிறப்பாக விளையாடிய வீரர்கள் பட்டியலும் தயார் செய்யப்பட்டுள்ளன. சிறந்த தலைமுறை வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலில் ஆர்.அஷ்வின், கோஹ்லியை தவிர  ஜோ ரூட் (இங்கிலாந்து), வில்லியம்சன் (நியூசிலாந்து), ஸ்மித் (ஆஸி.), டி வில்லியர்ஸ் (தென் ஆப்ரிக்கா), சங்கக்கரா (இலங்கை) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் இருந்து ஒருவர் வாக்குகள் மூலம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படும். டெஸ்ட் வீரர்கள் விருதுக்கான பட்டியலில் கோஹ்லி, ரூட், வில்லியம்சன்,  ஆண்டர்சன், ரங்கனா ஹெராத், யாசிர் ஷா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலில்  கோஹ்லி, மலிங்கா, ஸ்டார்க்,  டி வில்லியர்ஸ், ரோகித் சர்மா, எம்.எஸ்.டோனி, சங்கக்கரா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். டி20ல் கோஹ்லி, ரஷீத் கான், தாஹிர்,  பிஞ்ச், கிறிஸ் கேல் ஆகியோரை ஐசிசி தேர்வு செய்துள்ளது. மொத்தத்தில் சிறந்த தலைமுறை வீரருக்கான  தேர்வு பட்டியலில் மட்டுமின்றி  டெஸ்ட், ஒருநாள், டி20 என 3வகையான போட்டிகளுக்கான பட்டியலிலும் கோஹ்லி இடம் பிடித்துள்ளார். மேலும் 5வது விருதாக  கிரிக்கெட்டில் சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டதற்காக ‘ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்’ விருதுக்கான தேர்வு பட்டியலிலிலும் கோஹ்லி இடம் பிடித்துள்ளார். கூடவே எஸ்.எஸ் டோனியும் இந்த விருதுக்கு தேர்வாகி உள்ளார். இவர்களுடன் வில்லியம்சன்,  மெக்கல்லம், வெட்டோரி,  மிஸ்பா உல் ஹக், மகிளா ஜெயவர்த்தனா (இலங்கை),   வீராங்கனைகள் அன்யா ஷ்ரப்சோல், கேத்தரின் பிரன்ட் (இங்கிலாந்து) ஆகியோரையும் ஐசிசி தேர்வு செய்துள்ளது. எத்தனை போட்டி இருந்தாலும்  தலைமுறையின் சிறந்த வீரருக்கான  விருது  கோஹ்லிக்குதான் என்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

மூலக்கதை