வழக்குகளில் அடுத்தடுத்து தோற்றதால் பணிந்தார் ஆட்சி மாற்றத்துக்கு டிரம்ப் சம்மதம்: பிடென் அதிபராவதற்கான பணிகள் தொடக்கம்

தினகரன்  தினகரன்
வழக்குகளில் அடுத்தடுத்து தோற்றதால் பணிந்தார் ஆட்சி மாற்றத்துக்கு டிரம்ப் சம்மதம்: பிடென் அதிபராவதற்கான பணிகள் தொடக்கம்

வாஷிங்டன்: சட்டப்போராட்டத்தில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்ததால் துவண்டு போன அமெரிக்க அதிபர் டிரம்ப், முதல் முறையாக ஆட்சி அதிகார மாற்ற நடவடிக்கைக்கு சம்மதித்தார். ஆனாலும், தனது சட்டப்போராட்டம் தொடரும் என டிரம்ப் கூறி உள்ளார். கடந்த 3ம் தேதி நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடென் வெற்றி பெற்றுள்ளார். தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வியை சந்தித்துள்ளார். ஆனாலும் டிரம்ப் தனது தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல், தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக பல்வேறு வழக்குகள் தொடர்ந்துள்ளார். அடுத்த மாதம் பிடென் முறைப்படி அதிபராக அறிவிக்கப்பட்டு ஜனவரி 20ம் தேதி பதவியேற்க வேண்டும்.டிரம்ப் பிரசார குழுவினர் பல மாகாணங்களிலும் தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததால், ஆட்சி அதிகார மாற்றம் சுமூகமாக நடக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டிரம்ப்பின் வழக்குகள் பல நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. இது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. சொந்த கட்சியிலும் பிடென் அரசு நிர்வாகத்திற்கு டிரம்ப் வழிவிட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.இந்நிலையில், டிரம்ப் முதல் முறையாக ஆட்சி அதிகார மாற்றத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகார மாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஜெனரல் சர்வீஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (ஜிஎஸ்ஏ) என்ற அரசு அமைப்பு முறைப்படி செய்ய வேண்டிய செயல்முறைகளை செய்திட டிரம்ப் பரிந்துரைத்துள்ளார். ஜிஎஸ்ஏ அமைப்பின் தலைவர் எமிலி மர்பி உட்பட முக்கிய அதிகாரிகள் டிரம்ப் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டவர்கள். இதனால், இவர்கள் பிடெனின் வெற்றியை அங்கீகரிக்கவில்லை. இந்த அமைப்பு முதல் முறையாக பிடெனின் வெற்றியை ஏற்றுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக அமைப்பின் தலைவர் எமிலி, பிடெனுக்கு கடிதம் அனுப்பினார். இந்த கடிதத்தை தொடர்ந்து டிரம்ப் ஆட்சி மாற்றத்திற்கு சம்மதம் தெரிவித்தார். அதே சமயம், தேர்தல் முறைகேட்டை எதிர்த்து தனது சட்டப்போராட்டம் தொடரும் என்றும் அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றத்தின் ஆரம்ப கட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டதற்கு பிடென் அணியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரவும், நாடு சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளவும் ஜிஎஸ்ஏ எடுத்திருக்கும் முடிவுகள் அவசியமான ஒன்று என பிடென் அணியினர் கூறி உள்ளனர். எனவே, புதிய அதிபர் பதவியேற்பில் நிலவிய சிக்கல்கள் ஓரளவுக்கு நீங்கி, பிடென் பொறுப்பேற்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்க உள்ளன.மிச்சிகனில் பிடென் வெற்றி உறுதியானதுமிச்சிகன் மாகாணத்தில் பிடென் 1 லட்சத்து 54 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் டிரம்ப்பை வென்றதாக தேர்தல் அதிகாரிகள் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். பிடெனின் வெற்றியை அங்கீகரிக்கும் மாகாண வாரிய வாக்கெடுப்பு நேற்று நடந்தது. இதில் ஜனநாயக கட்சி பிரதிகளும், டிரம்ப்பின் குடியரசு கட்சி பிரதிநிதியும் பிடெனுக்கு வாக்களித்தனர். மற்றொருவர் வாக்களிக்கவில்லை. இதனால் 3-0 என்ற கணக்கில் பிடென் வெற்றி உறுதியானது. முன்னதாக நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் மிச்சிகன் மாகாண பிரதிநிதிகளுடன் டிரம்ப் ஆலோசித்தார். அப்போது தேர்தல் முறைகேடுக்கான எந்த ஆதாரமும் தங்களிடம் இல்லாததால், வெற்றியை ஏற்றுக் கொள்வதை தவிர வேறு வழியில்லை என்பதை விளக்கினர். அதைத் தொடர்ந்து பிடென் வெற்றி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை