சென்னையில் இருந்து 350 கி.மீ தூரத்தில் ‘நிவர்’புயல்: வெளுத்துவாங்கும் பலத்த மழை

தமிழ் முரசு  தமிழ் முரசு
சென்னையில் இருந்து 350 கி.மீ தூரத்தில் ‘நிவர்’புயல்: வெளுத்துவாங்கும் பலத்த மழை

* 120 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மக்கள் வெளியில் நடமாட தடை
* காரைக்கால்- மாமல்லபுரம் இடையே நாளை கரையை கடக்கிறது

சென்னை: வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் இன்று நிவர் புயலாக மாறியது. இந்த புயல் நாளை மாலை காரைக்கால் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது.

பல மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. அவ்வப்போது விட்டு விட்டு மழை பொழிந்தது.

இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தம் உருவானது. அது படிப்படியாக வலுவடைந்து வந்தது.

இதனால் இன்று நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, அரியலூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் கனமழை மற்றும் மிககனமழை பெய்யும். கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.



அதே நேரத்தில் காற்றழுத்தம் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் மேலும் எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் இன்று காலை 5. 30 மணியளவில் காற்றழுத்தம் புயலாக மாறியது.

இந்த புயலுக்கு ‘நிவர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் தற்போது சென்னைக்கு அருகே 350  கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு அருகே 300 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இந்த புயல் இன்று இரவு மேலும் வலுப்பெற்று தீவிரப் புயலாக மாறும்.   நாளை மாலை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது, 120 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தற்போது 5 முதல் 6 கி. மீ. வேகத்தில் மெதுவாக நகர்ந்து கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, ராமேஸ்வரம், குளச்சல் ஆகிய 11 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 6 ஏற்றப்பட்டிருந்தது.

இன்று கடலூரில் 7ம் எண் புயல் கூண்டும், நாகை, காரைக்காலில் 5ம் எண் புயல் கூண்டும் ஏற்றப்பட்டது.

எண்ணூரில் 6ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நிவர் புயலால் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிகளவு பாதிப்பு இருக்கும் என்பதால் அந்த மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்தும் நிறுத்த அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மறுஅறிவிப்பு வரும் வரை பஸ்கள் இயக்கப்பட மாட்டாது என்று அரசு தெரிவித்துள்ளது. நிவர் புயல் கரையை கடக்கும்போது சென்னைக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

காலையில் இருந்து மழை பெய்து வருவதால் அனைத்து மாவட்ட மக்களும் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இதனால், சாலைகளில் மக்கள் நடமாட்டமும் குறைந்தது.

குறைந்த அளவிலேயே வாகனங்கள் சென்ற காட்சியை காண முடிந்தது. மழை மற்றும் புயலால் மக்கள் தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்று அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



மழை, புயலை சமாளிக்கும் வகையில் கடலூரில் 6 தேசிய பேரிடர் மீட்பு குழுவும், சென்னையில் 2 குழுவும் தயார் நிலையில் உள்ளது. மேலும் மின்வாரியம் சார்பில் 1000 பணியாளர்கள், 1 லட்சத்துக்கும் அதிகமான மின்கம்பம், மரம் அறுப்பான், பொக்லைன் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

அனைத்து மாவட்டங்களிலும் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசின் அறிவிப்பால் இன்று மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

நாகை, வேதாரண்யம், காரைக்கால் மற்றும் சென்னை மெரினா ஆகிய இடங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

கடற்கரை பகுதிகளில் வழக்கத்தை விட காற்று சற்று பலமாக வீசி வருகிறது.

மேலும் ஒரு புயல்
நிவர் புயல் நாளை காரைக்கால்மாமல்லபுரம் வழியாக தமிழக உள் மாவட்டங்கள் வழியாக தெலங்கானா சென்று 26ம் தேதி மும்பையில் வலுவிழக்கும் என்று தெரிகிறது. இதையடுத்து, 30ம் தேதி தெற்கு அந்தமான் பகுதியில் மேலும் ஒரு காற்றழுத்தம் உருவாகும்.

இதுமேலும் வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து வந்து டிசம்பர் 2ம் தேதி நாகை அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உதவி எண் அறிவிப்பு

காவல் துறை சார்பில் உதவி எண் அறிவிப்பு: ‘நிவர்’புயல் காரணமாக சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறை சென்னை அடையாரில் உள்ள மருதம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

கூடுதல் டிஜிபி நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் மையத்திற்கு பொதுமக்கள் அவசர உதவிக்காக ‘044 24343662, 044 24331074’என்ற எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை