தங்கம் விலை அதிரடி சரிவு; ஒரே நாளில் ரூ832 குறைந்தது

தமிழ் முரசு  தமிழ் முரசு
தங்கம் விலை அதிரடி சரிவு; ஒரே நாளில் ரூ832 குறைந்தது

* பவுன் ரூ37ஆயிரத்துக்குள் வந்தது
* நகை வாங்குவோர் மகிழ்ச்சி

சென்னை: தங்கம் விலை இன்று காலை அதிரடியாக சரிவை சந்தித்தது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 832 குறைந்துள்ளது நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தங்கம் விலை கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. சில நேரங்களில் அதிரடியாக உயர்ந்தும் வந்தது.

இந்த நிலையில் இந்த மாதமும் தீபாவளி வரை தங்கம் விலை சற்று உயர்ந்து வந்தது. அதன் பிறகு தங்கம் விலை குறைந்து வந்தது.

கடந்த 16ம் தேதி ஒரு பவுன் ரூ. 38,568, 17ம் தேதி ரூ. 48,432, 18ம் தேதி 38,240, 19ம் தேதி ரூ. 37,920, 20ம் தேதி ரூ. 37,920 ஆகவும் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. 21ம் தேதி தங்கம் விலை சற்று உயர்ந்து ஒரு பவுன் ரூ. 38,080க்கு விற்கப்பட்டது.

நேற்று தங்கம் விலை மீண்டும் குறைந்தது. ஒரு கிராம் ரூ. 4,748க்கும், பவுன் ரூ. 37,984க்கும் விற்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக சரிவை சந்தித்தது.

அதாவது கிராமுக்கு ரூ. 104 குறைந்து ஒரு கிராம் ரூ. 4,644க்கும், பவுனுக்கு ரூ. 832 குறைந்து ஒரு பவுன் ரூ. 37,152க்கும் விற்கப்பட்டது.

தங்கம் விலை கிடு, கிடுவென சரிவை சந்தித்தது நகை வாங்குவோரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் தங்கம் விலை பவுன் ரூ. 37 ஆயிரத்துக்குள் வந்துள்ளது நகை வாங்குவோருக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1874 டாலரில் இருந்து 1824 டாலராக குறைந்துள்ளது. இது உள்நாட்டு சந்தையில் எதிரொலித்து தங்கம் விலை குறைந்துள்ளது.

வரும் நாட்களில் தங்கம் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தங்கம் விலை குறைந்ததால் நகைக்கடைகளில் இன்று காலையில் இருந்து சற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது.


.

மூலக்கதை