தமிழகத்தை `நிவர்’புயல் தாக்கும் அபாயம்; முதல்வர் எடப்பாடியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகத்தை `நிவர்’புயல் தாக்கும் அபாயம்; முதல்வர் எடப்பாடியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

சென்னை: தமிழகத்தை நிவர் புயல் நாளை தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி இன்று தொலைபேசி மூலம் முதல்வர் எடப்பாடியுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

இதையொட்டி தற்போது, வங்கக்கடலில் `நிவர்’ புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் நாளை பிற்பகல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்றும், அப்போது 120 கி. மீ.

வேகத்தில் புயல் காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, தமிழகத்தில் புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து இன்று பிற்பகல் முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்திற்கு புயல் ஆபத்து இருப்பது குறித்து பிரதமர் மோடி இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தொலைபேசியில் பேசினார்.

அதேபோன்று, புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமியுடனும் பிரதமர் மோடி பேசினார். அப்போது, தமிழகத்தில் புயலை எதிர்கொள்ள எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி விளக்கம் அளித்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய பிரதமர் மோடி, புயலை எதிர்கொள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்துக்கு தேவைப்படும் உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்று உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

.

மூலக்கதை