நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மாவட்டங்களுக்கு ஆம்னி சேவை கட்: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மாவட்டங்களுக்கு ஆம்னி சேவை கட்: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மாவட்டங்களுக்கான ஆம்னி பஸ் சேவை ரத்து செய்துள்ளதாக அதன் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பரவலமாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக சென்னையில் இரவு முதல் விட்டு, விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதே நிலை கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் ஏற்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கும் போது பாதிப்பு மேலும் அதிகமாக இருக்கும் என்பதால், தமிழக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் ஒருபகுதியாக 7 மாவட்டங்களில் அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து ஆம்னி பஸ்களின் சேவையும் சம்மந்தப்பட்ட மாவட்டங்களில் நிறுத்தப்படுவதாக, அதன் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் வழக்கமான நாட்களில் 4,000 ஆம்னி பஸ்கள் இயக்கப்படும்.

தற்போது கொரோனா பரவல் அச்சம் காரணமாக பொதுமக்கள் பயணிக்க தயங்குகின்றனர். இதன் காரணமாக 400 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்ததது.

இந்நிலையில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மாவட்டங்களில் அரசு பஸ் சேவையை நிறுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து ஆம்னி பஸ்களின் சேவையும், புதுக்கோட்டை, நாகப்பட்டிணம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களுக்கு இன்று மதியம் 1 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை ஆம்னி பஸ்கள் இயக்கப்பட மாட்டாது.



அதன்படி சென்னையில் இருந்து சம்மந்தப்பட்ட மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களும், அங்கிருந்து சென்னைக்கு வரும் பஸ்களும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் சம்மந்தப்பட்ட வழித்தடத்தில் பிற மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களும் என தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறினார்.

.

மூலக்கதை