நிவார் புயல் திசை மாறவும் வாய்ப்புள்ளது: 'வெதர்மேன்' கணிப்பு

தினமலர்  தினமலர்
நிவார் புயல் திசை மாறவும் வாய்ப்புள்ளது: வெதர்மேன் கணிப்பு

சென்னை: நிவார் புயல் நெருக்கமாக வரும்போது, திசைமாறவும் வாய்ப்பு உள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருமாறும் எனவும், நாளை (நவ.,25) பிற்பகலில் மாமல்லபுரத்திற்கும், காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது: நிவார் புயல் சென்னைக்கு அருகில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நாளை இரவு, 70 நாட்ஸ் வேகத்தில் புயல் காற்று வீசக்கூடும். வர்தா புயலின் வேகம் 65 நாட்ஸ் அளவில் இருந்தது. இருப்பினும் புயல் நெருக்கமாக வரும் போது திசை மாறவும் வாய்ப்பு உள்ளது.

புயல் எங்கு கடக்கும் என்பது இன்று உறுதியாக தெரியவரும். நகரப்பகுதி அல்லாத, மக்கள் வசிப்பிடம் அதிகம் இல்லாத பகுதிகளில் புயல் கரையை கடக்கும் என நம்புவோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை