செமஸ்டர் கட்டண வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு

தினமலர்  தினமலர்
செமஸ்டர் கட்டண வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை : நடத்தாத தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தும்படி, அண்ணா பல்கலை பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மனுக்கள் மீதான தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த, ஹரிகரன் தாக்கல் செய்த மனு:

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய, அரசு உத்தரவிட்டது. நடத்தப்படாத தேர்வுகளுக்கு, மாணவர்களிடம் இருந்து கட்டணம் செலுத்தும்படி அண்ணா பல்கலை கோரியது.
தேர்வுக் கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே, 'பாஸ்' அறிவிப்பு வந்தது. கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு, தேர்வு முடிவு அறிவிக்கப்படவில்லை. கட்டணம் செலுத்தும்படி வற்புறுத்தாமல், தேர்வு முடிவை அறிவிக்கும்படி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று, சவுந்தர்யா என்ற மாணவியும் மனு தாக்கல் செய்தார்.மனுக்கள், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தன. தேர்வுக் கட்டணம் செலுத்தாவிட்டாலும், மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிடும்படி, நீதிபதி உத்தரவிட்டார்.தேர்வுக்காக செலவிடப்பட்ட விபரங்களை, தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தார்.

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, 'பல்கலை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் ஏற்படும் செலவுகள், தேர்வுக்கு பின்பு வருவதால், தேர்வு நடத்தப்படாத நிலையில், அந்த செலவு எப்படி கணக்கிடப்பட்டது' என, கேள்வி எழுப்பியிருந்தார்.இதையடுத்து, வழக்கு நேற்று மறுபடியும் விசாரணைக்கு வந்தபோது, அண்ணா பல்கலை தரப்பில், வழக்கறிஞர் எம்.விஜயகுமார் வாதாடியதாவது:

விடைத்தாள் மதிப்பீடு தவிர, மற்ற வகையில் செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. நியாயமான கட்டணமே வசூலிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை திருப்பித் தர அனுமதித்தால், அது ஒரு முன்னுதாரணமாகி விடும்.டில்லி உயர் நீதிமன்றம், சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில், கட்டணத்தை திருப்பி தர வேண்டியதுஇல்லை என கூறியுள்ளது.

மாணவர்களின் பின்னணியில் கல்லுாரிகள் உள்ளன; அவை தான் துாண்டி விடுகின்றன. தேர்வுக் கட்டணம், தணிக்கைக்கு உட்படும்.சில செலவினங்களில், ஏற்ற தாழ்வு இருக்கலாம். பல்கலையின் நலனுக்கு தான் இது பயன்படும்.இவ்வாறு, அவர் வாதாடினார்.
இரு தரப்பு வாதங்களுக்கு பின், வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளி வைத்தார்.

மூலக்கதை