ஜாம்ஷெட்பூருடன் இன்று மோதல் வெற்றியுடன் தொடங்க சென்னையின் எப்சி முனைப்பு

தினகரன்  தினகரன்
ஜாம்ஷெட்பூருடன் இன்று மோதல் வெற்றியுடன் தொடங்க சென்னையின் எப்சி முனைப்பு

வாஸ்கோ: ஐஎஸ்எல்  கால்பந்து தொடரின் 7வது சீசனில், சென்னையின் எப்சி அணி இன்று தனது முதல் லீக் ஆட்டத்தில்  ஜாம்ஷெட்பூர் எப்சி அணியுடன் மோதுகிறது. ஐஎஸ்எல் தொடரின் கடந்த 6 சீசன்களில், சென்னை அணி 2015, 2017ல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 3 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ள சென்னை, கடந்த ஆண்டு பைனலில் கொல்கத்தா அணியிடம் 1-3 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது. 2017ல் கோப்பையை வெல்ல காரணமாக இருந்த பயிற்சியாளர் ஜான் கிரிகோரி (இங்கிலாந்து), 2019 சீசனில் சென்னையை கரை சேர்க்க முடியாமல் தடுமாறினார். தொடர் தோல்வி, அதிலும் முதல் 4 போட்டிகளில் ஒரு கோல் கூட போட முடியாமல் அணி திணறியதால், தொடரின் இடையில் கிரிகோரி பதவி விலகினார்.இதையடுத்து ஸ்காட்லாந்தை சேர்ந்த ஓவன் கோயல் (54) பயிற்சியாளராக பொறுப்பேற்றார். அதன்பிறகு நிலைமை மாறியது. அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்த சென்னை அணி பைனலுக்கு முன்னேறி அசத்தியது. அதன்பிறகு  சென்னை அணியில் இருந்து விலகிய ஓவன் கோயல், இப்போது ஜாம்ஷெட்பூர் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார். கடந்த தொடரில் அதிக கோல் (15 கோல்கள்) அடித்த 3 வீரர்களில் ஒருவரான சென்னை அணியின் நெரிஜஸ் வால்ஸ்கிஸ் (லிதுவேனியா), இப்போது ஜாம்ஷெட்பூர் அணிக்கு மாறி விட்டார். அதனால் ஜாம்ஷெட்பூர் அணியின் பலம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் சென்னை அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. கடந்த முறை அணிக்கு பலமாக இருந்த யெலி சபா, ரபேல் கிரிவெல்லரோ (பிரேசில்), கோன்கல்வேஸ் (போர்ச்சுகல்), தொய் சிங், அனிரூத் தபா, லால் சங்கடே என திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை. சில வாரங்களுக்கு முன்பு சென்னை பயிற்சியாளராக ருமேனியாவை சேர்ந்த சபா லாஸ்ஸலோ (56) பொறுப்பேற்றுள்ளார். அவரும், அவருடன் புதிதாக இணைந்துள்ள பயிற்சியாளர்கள் குழுவும் அணிக்கு உத்வேகம் அளித்து வருகின்றனர். * இதுவரை....ஜாம்ஷெட்பூர் அணி 2017ல் அறிமுகமானது. கடந்த 3 ஆண்டுகளில் 2 முறை 5வது இடத்தையும், ஒரு முறை 8வது இடத்தையும் பெற்றது. சென்னை அணி இதுவரை 6 சீசன்களிலும் விளையாடி 2 முறை கோப்பை வென்றுள்ளதுடன், ஒருமுறை இறுதி ஆட்டம் வரையிலும், ஒருமுறை அரையிறுதி வரையிலும் முன்னேறியுள்ளது. 2016ல் 7வது இடம், 2018ல் கடைசி இடம் பிடித்தது. இரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் சென்னை 2 ஆட்டங்களிலும், ஜாம்ஷெட்பூர் ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சிய 3 ஆட்டங்கள் சமனில் முடிந்துள்ளன. * தமிழக வீரர்கள்சென்னை அணியில் தமிழகத்தைச் சேர்ந்த தனபால் கணேஷ், எட்வின் வென்ஸ்பால், பாண்டியன் சீனிவாசன், பாலாஜி கணேசன் ஆகிய 4 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். சென்னை அணியில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் இடம் பெற்றிருப்பது இதுதான் முதல்முறை. ஆனால் ஆடும் அணியில் தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது எப்போதும் அரிதாகவே இருக்கிறது. முதல் 2 சீசன்களில் ஆட வாய்ப்பு தராமல் வைக்கப்பட்டு இருந்த தனபால் கணேஷ் 2017 சீசனில்தான் ஆடும் வாய்ப்பை பெற்றார். அந்த சீசனில் கோப்பையை வெல்ல அவரும் காரணம். அதன் பிறகு 2 சீசன்களில் சரியாக வாய்ப்பு தரவில்லை. வென்ஸ்பால் போன சீசனில் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். பாண்டியன் சீனிவாசனுக்கு கடந்த 2 சீசன்களாக ஒரு போட்டியில் கூட வாய்ப்பு தரப்படவில்லை. இது அவருக்கு 3வது சீசன். இந்த சீசனில் புதிதாக பாலாஜி கணேசன் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் நிலைமை எப்படி என்பது இனிமேல் தான் தெரியும்.

மூலக்கதை