முதல்வர் வேட்பாளராக துரைமுருகனை அறிவிப்பாரா ஸ்டாலின்

தினமலர்  தினமலர்
முதல்வர் வேட்பாளராக துரைமுருகனை அறிவிப்பாரா ஸ்டாலின்

சென்னை : ''சட்டசபை பொதுத்தேர்தலில், முதல்வர் வேட்பாளராக, துரைமுருகனை அறிவிக்க தயாரா,'' என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், கேள்வி எழுப்பி உள்ளார்.

கவிஞர் சுரதாவின், 100வது பிறந்த நாளை ஒட்டி, சென்னை, அசோக் நகரில் உள்ள அவரது சிலைக்கு அருகே, அவரது படத்திற்கு, நேற்று அமைச்சர்கள் ஜெயகுமார், பெஞ்சமின், பாண்டியராஜன் மற்றும் அதிகாரிகள், மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

அதன்பின், அமைச்சர் ஜெயகுமார், நிருபர்களிடம் கூறியதாவது:புயல் காரணமாக, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலுக்கு சென்ற மீனவர்கள், கரைக்கு திரும்புகின்றனர். அ.தி.மு.க., என்பது, மிகப்பெரிய இயக்கம். 1998ல் பா.ஜ., உடன் இணைந்து, லோக்சபா தேர்தலில், மகத்தான வெற்றி பெற்றோம். அதேபோல, வரும் சட்டசபை தேர்தலில், வெற்றி பெறுவோம்.

ஊர்வலம் செல்ல, யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலை வீச வாய்ப்புள்ளது.எனவே, அரசின் முடிவுக்கு, அரசியல் கட்சிகள் உட்பட, அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.கொரோனா மறுபடியும் வரக்கூடாது என்பதற்காக, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதை கண்டு கொள்ளாமல், ஊர்வலம் செல்வேன் என்பது, அரசுக்கும், பொது மக்களுக்கும் எதிரானது. சட்டத்திற்கு உட்படாதவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தி.மு. க., ஆட்சியில், அரசு நிகழ்ச்சியில், அரசியல் பேசி உள்ளனர். அனைத்து விஷயங்களும், அரசியலை சார்ந்தே உள்ளன.காங்கிரஸ் மற்றும் தி.மு.க.,வில், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், தலைமை பதவிக்கு வருவது குறித்து, அமித் ஷா பேசினார். அதற்கு, தி.மு.க.,வால் பதில் கூற முடியவில்லை.

அ.தி.மு.க.,வில் கொடி கட்டும் தொண்டன், முதல்வராக முடியும்; தி.மு.க.,வில் முடியுமா; சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளராக, துரைமுருகனை அறிவிக்க, ஸ்டாலின் தயாரா; ஸ்டாலினால் முடியாவிட்டால், உதயநிதியை தான் அறிவிப்பார். துரைமுருகனை அறிவிக்க
மாட்டார். அ.தி.மு.க., கூட்டணி முடிவாகி உள்ளது. தொகுதி எத்தனை என்பதை, இரு கட்சி தொகுதி பங்கீட்டு குழு அமர்ந்து பேசி, முடிவு செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை