காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை

ஜெனிவா: உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஐநா சபை தற்போது ஒரு புதிய அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. கிரீன் ஹவுஸ் வாயுக்கள் உலக அளவில் அதிகரித்து வருவதாகவும் இதனால் பருவநிலை மாற்றம் அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கிரீன் ஹவுஸ் வாயுக்கள் அதிகரித்துள்ளதாகவும் அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன் புகை காரணமாக இயற்கை மற்றும் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் இந்த கிரீன் ஹவுஸ் வாயுக்கள் அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் தகவல் அளித்துள்ளனர்.

பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா இணைய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்து வருகிறது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகினார். தற்போது ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அரசு ஆட்சி அமைத்ததும் முதல் வேலையாக பருவநிலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கு முக்கியக் காரணம் உலக அளவில் காற்று மாசு அதிகம் ஏற்படுத்தும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. மற்ற சிறிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் இணைந்தாலும்கூட அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரண்டு பெரிய உலக நாடுகள் ஒத்துழைப்பால் மட்டுமே உலகில் கிரீன் ஹவுஸ் வாயுக்கள் பெருகுவதை தவிர்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஐநாவின் இந்த கோரிக்கையை ஜோ பைடன் அரசு ஏற்குமா என்ற கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை