நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்துடன் மத்திய அமைச்சரவை செயலாளர் ஆலோசனை

தினகரன்  தினகரன்
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்துடன் மத்திய அமைச்சரவை செயலாளர் ஆலோசனை

டெல்லி: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்துடன் மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா இன்று ஆலோசனை நடத்தி உள்ளார். தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி சென்னையிலிருந்து 590 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரிக்கு தென் கிழக்கே 550 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.மேலும், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயலாக மாறி வடமேற்கு திசையில் நகா்ந்து வரும் நவம்பர் 25ம் தேதி பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே தீவிரப் புயலாக கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. நிவர் புயல் கரையை கடக்கும் போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து,  நிவர் புயல் தொடர்பாக தமிழக அரசு சார்பில் செய்யப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்திடம் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்ற உத்தரவு கடுமையாக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். மேலும் இந்த ஆலோசனையில் தமிழகம், புதுச்சேரி, ஆந்திர மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் பங்கேற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை