பேரறிவாளனுக்கு ஒரு வாரம் பரோல் நீடிப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பேரறிவாளனுக்கு ஒரு வாரம் பரோல் நீடிப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: இன்றுடன் பரோல் முடிவடையும் நிலையில் பேரறிவாளனுக்கு ஒரு வாரம் பரோல் நீடித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த 3ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது பேரறிவாளன், மத்திய அரசு தரப்பில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதி அளித்து, வழக்கை 23ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், பேரறிவாளன் மனு தொடர்பாக சிபிஐ-யின் எம்டிஎம்ஏ.

அமைப்பின் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் டி. புனிதமணி, உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில், ‘ராஜிவ்காந்தி கொலை சதியில் பேரறிவாளனின் பங்கை உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் உறுதிசெய்துள்ளது.

அவரை விடுவிக்க பரிந்துரைத்த தமிழக அரசின் தீர்மானத்தின் மீதும், அவரது கருணை மனு மீதும் ஆளுநர் முடிவு எடுக்காமல் இருப்பதற்கும் சிபிஐ-க்கும் எந்த தொடர்பும் இல்லை. பேரறிவாளனை விடுவிப்பது குறித்து ஆளுநர்தான் முடிவு எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே பேரறிவாளன் சார்பிலும், சில உச்சநீதிமன்ற தீர்ப்புகளை குறிப்பிட்டு பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வந்தது.

அப்போது, இன்றுடன் பேரறிவாளனுக்கு பரோல் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு வாரம் பரோலை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், சிபிஐ தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்திற்கு தமிழக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அது குறித்து உச்சநீதிமன்றம் பரிசீலிக்கும்.

பேரறிவாளனுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை குறித்து தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். வருகிற 2021 ஜனவரியில் வழக்கு விசாரணை நடக்கும் ேபாது, பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் ஆளுநருக்கு உண்டான அதிகாரம் குறித்தும் விசாரித்து முடிவு எடுக்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.



.

மூலக்கதை