குளிர் சீசன், தீபாவளிக்கு பிந்தைய சூழ்நிலையால் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா; வடமாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு அமல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
குளிர் சீசன், தீபாவளிக்கு பிந்தைய சூழ்நிலையால் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா; வடமாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு அமல்

புதுடெல்லி: குளிர் சீசன் மற்றும் தீபாவளிக்கு பிந்தைய சூழ்நிலையால் வடமாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. அதனால் பல மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91 லட்சத்தை கடந்த நிலையில், தொற்று பாதிப்பால் 1. 33 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவின் தொற்று மீண்டும் வேகம் அடைந்துள்ளது.

குளிர் சீசன் மற்றும் தீபாவளிக்கு பிந்தைய சூழ்நிலையால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவதுறை அறிக்கைகள் கூறுகின்றன. தேசிய தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதேபோல் பல மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், பெரிய நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்றிரவு முதல் மத்திய பிரதேசத்தின் இந்தூர், குஜராத்தின் சூரத் மற்றும் ராஜ்கோட் ஆகிய இடங்களில் இரவுநேர முழு ஊரடங்கு அமலாகி இருந்தது.

இந்தூரில், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், குஜராத்தின் இரு நகரங்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இந்தூரில் நேற்று ஒரே நாளில் 546 பேருக்கு புதியதாக நோய் தொற்று ஏற்பட்டது.



குஜராத்தில் நேற்று 1,515 பேருக்கு புதியதாக தொற்று ஏற்பட்டது. ராஜஸ்தானின் 8 நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

இதனுடன், பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் செல்வோருக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ. 200லிருந்து ரூ. 500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் ஜெய்ப்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறத்தில் உள்ள சந்தைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், திருமண விழாவில் கலந்துகொள்வோர், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளோர், பஸ், ரயில் மற்றும் விமான பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பல மாநிலங்களில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வருவதால் கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

.

மூலக்கதை