2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அமித் ஷா இன்று அடிக்கல்

தினமலர்  தினமலர்
2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அமித் ஷா இன்று அடிக்கல்

சென்னை மெட்ரோ ரயில், இரண்டாம் கட்ட திட்டத்திற்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
மூன்றாண்டுகளில் இந்த திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை வாசிகள் குஷியாகி உள்ளனர். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், சென்னைக்கான பொது போக்குவரத்து திட்டத்தில், புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.சென்னையில், பொது போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக, இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை துவங்கியுள்ளது.


ஆலந்துார் -- சென்னை சென்ட்ரல், விமான நிலையம் -- வண்ணாரப்பேட்டை இடையே தற்போது மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.இதில், ஒரு பகுதி சுரங்க முறையிலும், ஒரு பகுதி மேம்பால முறையிலும் அமைந்துள்ளது. இந்த முதல்கட்ட திட்டத்தின் நீட்சியாக, வண்ணாரப்பேட்டை -- விம்கோ நகர் வரையிலான ரயில் பாதை அமைக்கும் பணி, இறுதி
கட்டத்தில் உள்ளது.கொரோனாவால் ஏற்பட்ட சிக்கல்களால், இப்பணி முடிவது தாமதமாகியுள்ளது. விரைவில், இந்த வழித்தடம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது, ரயில்கள் இயக்கப்படும் இரண்டு வழித்தடத்திலும், மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளது. இதனால், மெட்ரோ ரயில் நிறுவனம், இரண்டாம் கட்டமாக, மூன்று முக்கிய வழித்தடங்களில், இச்சேவையை செயல்படுத்த முடிவு செய்தது.

மூன்று வழித்தடங்கள்



இதன்படி, மாதவரம் - சிறுசேரி சிப்காட், மாதவரம் - சோழிங்கநல்லுார், கலங்கரை விளக்கம் - - பூந்தமல்லி என, மூன்று வழித்தடங்களில், 119 கி.மீ., தொலைவுக்கு, இரண்டாம் கட்ட திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு, முதலில், 80 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என, மதிப்பிடப்பட்டது. மத்திய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில், திட்ட வடிவமைப்பில் சில மாறுதல்கள் செய்யப்பட்டதால், மதிப்பீடு, 69 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்தது.

இதில், ஒரு பகுதி நிதி, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிதி நிறுவனம் வாயிலாக பெறப்பட்டது.இன்னொரு பகுதி நிதி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி வாயிலாக பெற, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிதி ஏற்பாடு அடிப்படையில், இத்திட்டம் இரண்டு

கட்டங்களாக பிரித்து செயல்படுத்தப்படுகிறது.இதன்படி, மாதவரம் -- சிறுசேரி சிப்காட் இடையிலான, 46 கி.மீ., மாதவரம் -- சோழிங்கநல்லுார் திட்டத்தில் மாதவரம் -- கோயம்பேடு வரையிலான வழித்தடம் ஆகியவை முன்னுரிமை திட்டமாக பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த பணிகளை முதலில் துவக்க, அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப்பட்டுள்ளன.

பணிகள் தீவிரம்



இந்த வழித்தடத்தில், கட்டுமான பணிகளை விரைந்து முடித்து, மூன்று ஆண்டுகளில் போக்குவரத்தை துவக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளில், மெட்ரோ ரயில் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.
இதில், கலங்கரை விளக்கம் -- பூந்தமல்லி, கோயம்பேடு -- சோழிங்கநல்லுார் வழித்தடங்களில், கட்டுமான பணிகளை துவக்க, மெட்ரோ ரயில் நிறுவனம் சுறுசுறுப்பாக களம்
இறங்கியுள்ளது. நிலம் கையகப்படுத்துதல், கட்டுமான வடிவமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் முடிக்கப்பட்டால், வட சென்னையில் இருப்பவர்கள் தென் சென்னைக்கும், தென் சென்னையில் இருப்பவர்கள் வட சென்னைக்கும், போக்குவரத்து நெரிசல் இன்றி எளிதாக சென்று வர வாய்ப்பு ஏற்படும்.மாதவரம், சிறுசேரி, பூந்தமல்லி ஆகிய இடங்களில், மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் புதிய பணிமனைகள் அமைய உள்ளன.

இன்று அடிக்கல்



சென்னையின் எந்த பகுதிக்கும், எளிதில் சென்று வரும் வகையில், மெட்ரோ ரயில் சேவை மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும். இதில், புதிய முன்னேற்றமாக, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், தமிழக அரசின் திட்டமாக மாற்றப்பட்டுள்ளது.இதனால், நிர்வாக ரீதியான முடிவுகளை விரைந்து எடுத்து, திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியும்.
இந்த பின்னணியில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட கட்டுமான பணிகளுக்கு, இன்று அடிக்கல் நாட்டப்படுகிறது.சென்னையின் போக்குவரத்து உள்கட்டமைப்பு மேம்பாட்டில், இன்றைய நிகழ்வு மிக முக்கிய நாளாக கருதப்படும். அந்த அளவுக்கு மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஏர்போர்ட் -- கிளாம்பாக்கம் திட்டம் அவசியம்!



சென்னை புறநகரில், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்துார், வண்டலுார் உள்ளிட்ட பகுதி மக்கள், மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்த ஆர்வமாக உள்ளனர்.
ஆனால், இவர்கள் விமான நிலையத்தில் இருந்து தான், இச்சேவையை பயன்படுத்த முடியும் என்ற நிலை உள்ளது. இந்நிலையில், வண்டலுார், கிளாம்பாக்கத்தில் புதிதாக அமைய உள்ள புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து, விமான நிலையம் வரை, மெட்ரோ ரயில் சேவை துவங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு, இதற்கான அனுமதியை வழங்கி உள்ளது.சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், இதற்கான பூர்வாங்க ஆய்வு பணிகளை முடித்துள்ளது. இதற்கு நிதி வழங்குவது தொடர்பான முக்கிய முடிவுகளை, மத்திய அரசு எடுக்க வேண்டியுள்ளது.இரண்டாம் கட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில், இதற்கான புதிய அறிவிப்பு வரும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர். தென்சென்னை புறநகர் மக்கள் இதற்காக காத்திருக்கின்றனர்.

மக்கள் குடியேறுவது பரவலாகும்!



நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:சென்னையில் மெட்ரோ சேவை துவங்கிய பின், பொது போக்குவரத்தை பயன்படுத்துவதில், புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. மெட்ரோ வழித்தடத்தை
ஒட்டிய பகுதிகளில், புதிதாக வீடு வாங்க மக்கள் விரும்புகின்றனர்.தொழில் நிறுவனங்களும், புதிய இடத்தை தேர்வு செய்யும் போது, மெட்ரோ வழித்தடம் பக்கத்தில் உள்ளதா என, பார்க்க துவங்கியுள்ளனர். இதனால், சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில், வர்த்தக வளர்ச்சியில் மெட்ரோ சேவை, புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
கல்வி, வேலை வாய்ப்புகாரணமாக, சென்னையில் புதிதாக வீடு வாங்கி குடியேற நினைப்பவர்கள், தங்கள் நிதி நிலைக்கு ஏற்ப, எங்கு வேண்டுமானாலும் குடியேறலாம். பழைய மாமல்லபுரத்தில் வேலை
என்பதற்காக, இதை ஒட்டிய பகுதியில் தான் வீடு வாங்க வேண்டும் என்பதில்லை.பூந்தமல்லி, மாதவரம், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் வீடு கிடைத்தாலும் நிம்மதியாக குடியேறலாம். எவ்வித போக்குவரத்து நெரிசலும் இன்றி, அதிகபட்சம் துாரத்தையும் ஒரு மணி நேரத்திற்குள் அடைந்துவிடலாம். விமான நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகிய இடங்களுக்கு, நகரின் எந்த மூலையில் இருந்தும், உடனடியாக செல்ல வாய்ப்பு ஏற்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

கட்டுமான நிறுவனங்கள் போட்டி!



இரண்டாம் கட்ட பணிகள் குறித்து, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மெட்ரோ கட்டுமான பணிகளை பொறுத்தவரை, பெரும்பாலும் சர்வதேச முறையில் ஒப்பந்தம் கோரப்பட்டு, நிறுவனங்கள் தேர்வு
செய்யப்படுகின்றன. முதல் கட்ட பணிகளை போன்று, இரண்டாம் கட்ட கட்டுமான பணிக்கும், ஒப்பந்ததாரர்கள் தேர்வு துவங்கியுள்ளது.வேறு எந்த உள்கட்டமைப்பு திட்டங்களை
காட்டிலும், மெட்ரோ ரயில் கட்டமைப்பு பணியில் ஈடுபட, பிரபலமான பெரிய நிறுவனங்கள் போட்டி போடும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கட்டுமானத்துறை முடங்கியுள்ள இந்நிலையில், மெட்ரோ பணிகள் துவக்கம், கட்டுமான துறைக்கு புத்துணர்வை அளிக்கும்.சென்னை போன்ற நெரிசலான நகரங்களில், இதுபோன்ற பெரிய திட்டங்களை செயல்படுத்தும் போது, இயல்பாகவே பல்வேறு பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. இதை கருத்தில் வைத்து, இரண்டாம் கட்ட பணிகளில், மெட்ரோ ரயில் நிறுவனம் இறங்கியுள்ளது.

சுரங்க மற்றும் மேல் மட்ட ரயில் நிலையங்கள் அளவு குறைக்கப்பட்டு, திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், அதிக அளவில் நிலம் எடுப்பது குறைந்துள்ளது.குறிப்பாக, இரண்டாம் கட்டத்தில், அரசு நிலங்களையே அதிகமாக பயன்படுத்த, மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. குறைந்தபட்ச அளவிலேயே, தனியார் நிலம் பயன்படுத்தப்பட உள்ளது. இதனால்,மக்களுக்கு இடையூறு இல்லாமல், இரண்டாம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மாதவரம் -- சோழிங்கநல்லுார்!



இரண்டாம் கட்ட திட்டத்தில், ஐந்தாவது வழித்தடமாக, மாதவரம் -- சோழிங்கநல்லுார் மெட்ரோ தடம் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம், 47 கி.மீ., தொலைவுக்கான இவ்வழித்தடத்தில், 41.17 கி.மீ., மேம்பால முறையிலும், 5.3 கி.மீ., சுரங்க முறையிலும், பாதை அமைக்கப்பட உள்ளது. இதில், 41 ரயில் நிலையங்கள் நிலத்துக்கு மேலும், ஆறு ரயில் நிலையங்கள் சுரங்க முறையிலும் அமைய உள்ளன.இத்தடத்தில், மாதவரம், மஞ்சம்பாக்கம், ரெட்டேரி சந்திப்பு, கொளத்துார், வில்லிவாக்கம், அண்ணா நகர், திருமங்கலம், கோயம்பேடு, ஆழ்வார் திருநகர், வளசரவாக்கம், போரூர் சந்திப்பு, முகலிவாக்கம், ஆலந்துார், பரங்கிமலை, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், மேடவாக்கம், பெரும்பாக்கம், எல்காட், சோழிங்கநல்லுார் ஆகிய பகுதிகள் இணைக்கப்படும்.

மாதவரம் -- சிறுசேரி சிப்காட்!



இரண்டாம் கட்ட திட்டத்தில், மூன்றாவது வழித்தடமாக, மாதவரம் -- சிறுசேரி சிப்காட் வழித்தடம் அமைந்துள்ளது. மொத்தம், 45.13 கி.மீ., தொலைவுக்கான இதில், 19.9 கி.மீ., மேம்பால முறையிலும், 26.72 கி.மீ., சுரங்க முறையிலும் அமைக்கப்படுகின்றன.இந்த வழித்தடத்தில் அமைய உள்ள, 49 ரயில் நிலையங்களில், 20 நிலத்துக்கு மேலும், 29 சுரங்க முறையிலும் அமைய உள்ளன. மாதவரம், மூலக்கடை, செம்பியம், பெரம்பூர், ஓட்டேரி,
படாளம், அயனாவரம், புரசைவாக்கம், கெல்லீஸ், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, அடையாறு,
திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார், செம்மஞ்சேரி, சிறுசேரி, சிப்காட் ஆகிய பகுதிகள் இந்த திட்டத்தில் இணைக்கப்படும்.

கலங்கரைவிளக்கம் -- பூந்தமல்லி!



இரண்டாம் கட்ட திட்டத்தின் நான்காவது வழித்தடமாக, கலங்கரை விளக்கம் -- பூந்தமல்லி வழித்தடம் அமைகிறது. மொத்தம், 26.09 கி.மீ., தொலைவில், 16 கி.மீ., மேம்பால முறையிலும், 10.07 கி.மீ., சுரங்க முறையிலும் அமைய உள்ளது.இதில், மொத்தம் உள்ள, 30 ரயில் நிலையங்களில், 18 நிலத்துக்கு மேலும், 12 சுரங்க முறையிலும் அமைய உள்ளது. இத்தடத்தில், கலங்கரை விளக்கம், பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, நந்தனம், பனகல் பூங்கா, கோடம்பாக்கம், வடபழநி, சாலிகிராமம், ஆழ்வார்திருநகர், வளசரவாக்கம், ஆலப்பாக்கம், போரூர், ஐயப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், பூந்தமல்லி பஸ் நிலையம் ஆகிய பகுதிகள் இணையும்.-- நமது நிருபர் --

மூலக்கதை