'பண்டிகை கால வர்த்தகம் கைகொடுக்கும்!' உள்நாட்டு ஆடை உற்பத்தி துறையினர் நம்பிக்கை

தினமலர்  தினமலர்
பண்டிகை கால வர்த்தகம் கைகொடுக்கும்! உள்நாட்டு ஆடை உற்பத்தி துறையினர் நம்பிக்கை

திருப்பூர்;அடுத்தடுத்து வரும் பண்டிகைகளால், வர்த்தகம் எழுச்சிபெறும் என்கிற நம்பிக்கை, திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர் மத்தியில் பிறந்துள்ளது.உள்நாட்டு சந்தைக்கான பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், திருப்பூரில் ஏராளம் உள்ளன.
தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கான, மகாராஷ்டிரா என நாடுமுழுவதும் உள்ள வர்த்தகர்கள், திருப்பூர் நிறுவனங்களுக்கு, ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்களை வழங்குகின்றனர்.கோடை, குளிர், பண்டிகை கால ஆடை உற்பத்தி மிக முக்கியமானதாக உள்ளது. ஆண், பெண், குழந்தைகளுக்கான உள்ளாடை ரகங்கள், டீ-சர்ட், பேஷன் ஆடை ரகங்கள் என அனைத்துவகை பின்னலாடை ரகங்களும் தயாரிக்கப்படுகிறது.கொரோனாவால், இந்த ஆண்டு திருப்பூர் நிறுவனங்கள், கோடை கால ஆடை உற்பத்தியை முழுமையாகவும்; குளிர்கால ஆடை தயாரிப்பில் பெரும்பகுதியை இழந்துள்ளது.

வடமாநிலங்களில் மழை, கேரளாவில் கொரோனா இரண்டாம் அலையால், தீபாவளி வர்த்தகமும் எதிர்பார்த்த அளவில் நடைபெறவில்லை.தீபாவளி விடுமுறைக்கு பின், அனைத்து ஆடை உற்பத்தி நிறுவனங்களும், நாளை முதல் மீண்டும் இயக்கத்தை துவக்குகின்றன. அடுத்த மாதம், 25ல் கிறிஸ்துமஸ், தொடர்ந்து ஆங்கி புத்தாண்டு, அதன்பின், பொங்கல் என, அடுத்தடுத்து மூன்று முக்கிய பண்டிகைகள் வருகின்றன.கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு, அதிகளவு ஆர்டர்கள் கிடைக்கும்; வர்த்தகம் எழுச்சி பெறும் என்கிற நம்பிக்கை, திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர் மத்தியில் பிறந்துள்ளது.
இது குறித்து, லகு உத்யோக் பாரதி தேசிய செயலாளர் மோகனசுந்தரம் கூறியதாவது:வைரஸ் பரவல், வடமாநிலங்களில் மழை காரணமாக, திருப்பூர் உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தி நிறுவனங்கள், கோடை, குளிர் மற்றும் தீபாவளி ஆர்டர்களை பெருமளவு இழந்துள்ளன. கொரோனா பரவல் குறைந்துவருவது, புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகள் வர உள்ளன; இம்மூன்று பண்டிகைகளைசார்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து, திருப்பூர் நிறுவனங்களுக்கு ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் அதிகளவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கொரோனா ஊரடங்குக்கு முன்புவரை அனுப்பிய ஆடைக்கான தொகையை வழங்காமல், வெளிமாநில வர்த்தகர்கள் இழுத்தடிக்கின்றனர். மொத்த நிலுவையில், 10 சதவீத தொகையை மட்டுமே வழங்குகின்றனர். இது, ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்துகிறது.
பண்டிகை கால ஆடை தயாரிப்பை சிறப்பாக மேற்கொள்ள, ஒவ்வொரு நிறுவனமும் வர்த்தகர்களிடமிருந்து நிலுவை தொகைகளை வசூலிப்பதில் முனைப்பு காட்டி வருகின்றன. கொரோனாவால், இந்திய சந்தையில், சீனா, வங்கதேசம் போன்ற பிறநாட்டு ஆடை இறக்குமதி தடைபட்டுள்ளது.இது, உள்நாட்டு ஆடை உற்பத்தி துறையினருக்கு, வாய்ப்புகளை அதிகரிக்க செய்துள்ளன. நிறுவனங்கள், அழகிய வண்ணங்களில், புதுமையான பேஷன் ஆடை ரகங்களை தயாரித்து, உள்நாட்டு சந்தை வாய்ப்புகளை வசப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை