டிக்கெட்...டிக்கெட்...! பஸ்களில் பயணிகள் அதிகரிப்பு :நீடிக்க வேண்டும் ஒத்துழைப்பு

தினமலர்  தினமலர்
டிக்கெட்...டிக்கெட்...! பஸ்களில் பயணிகள் அதிகரிப்பு :நீடிக்க வேண்டும் ஒத்துழைப்பு

கோவை:கோவையில் பஸ்களில் பயணிப்போர்எண்ணிக்கை தற்போது, 3.13 லட்சமாக அதிகரித்து,பழைய நிலையை எட்டி வருகிறது. விதிமுறைகளை சரியாக பின்பற்றி, பயணிகள் ஒத்துழைத்தால், நோய் பரவலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பழைய நிலையை எட்டி விட முடியும்.
கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் போக்குவரத்து, கடந்த ஜூன் மாதம் மாநிலத்திற்குள் எட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.60 சதவீத பயணிகளுடன், கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட நோய் பரவல் தடுப்பு வழிகாட்டுதல்களுடன், பஸ்களை இயக்க அறிவுறுத்தப்பட்டது.கோவையில், 1,326 பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டும் மக்கள் வெளியே வராததால், 992 ஆக எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இருப்பினும், காலை, மாலை போன்ற 'பீக்' நேரங்களில், பஸ்கள் நிரம்பி செல்வதை காண முடிந்தது.
கொரோனா பாதிப்பு மீண்டும் தலைதுாக்கியதால், ஆரம்பத்தில், 2.08 லட்சமாக இருந்த பயணிகள் எண்ணிக்கை, 1.30 லட்சமாக குறைந்தது.கடந்த, அக்., வரை, 1.5 லட்சத்துக்கும் குறைவானோர் பயணித்து வந்தனர். தற்போது, தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், 1.5 லட்சமாக இருந்த பயணிகள் எண்ணிக்கை, 3 லட்சத்து, 13 ஆயிரத்து, 845 ஆக அதிகரித்துள்ளது.
அரசு போக்குவரத்துக்கழக கோவை மண்டல பொது மேலாளர் மகேந்திரகுமார் கூறுகையில், ''இரு தினங்களுக்கு முன் வரை, 3 லட்சத்து, 13 ஆயிரத்து, 845 பேர் பயணித்துள்ளனர். 357 டவுன் பஸ்கள், 244 வெளியூர் பஸ்கள், 34 'ஸ்பேர்' பஸ்கள் உட்பட, 664 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப பஸ்கள்அதிகரிக்கப்படுவதுடன், கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் தீவிரப்படுத்தப்படும்,'' என்றார்.
சகஜ நிலை திரும்புவதற்கு ஏற்ப, பயணிகள் பாதுகாப்பு அம்சங்களை கடைபிடித்து, அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே, நோயை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்; பஸ் போக்குவரத்தும் இயல்பு நிலைக்கு திரும்பும்.

மூலக்கதை