சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

தினகரன்  தினகரன்
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

சென்னை: தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் 50% இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்ததற்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் அனைத்து ரிட் மனுதாரர்களும் பதிலளிக்க வேண்டும் என கடந்த 19ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய பதில்மனு தாக்கல் செய்துள்ளார். அதில்,” சூப்பர் ஸ்பெஷாலிட்டி மற்றும் மருத்துவ மேற்படிப்பில் இன்சர்வீஸ் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடங்களை வழங்குவது என்பது தனி இடஒதுக்கீடாக கண்டிப்பாக கருத முடியாது. ஏனெனில் இது ஒரு வகையாக மாணவர் சேர்க்கை தான். இத்தகைய திட்டம் என்பது மக்களுக்கு சேவை செய்யும் விதமாக செயல்படும் அரசு மருத்துவர்களுக்காக வழங்கப்படும் முன்னுரிமையே தவிர, தனி இடஒதுக்கீடு கிடையாது.மேலும் இது அரசு கொள்கை சார்ந்த ஒன்றாகும். அதனால் இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாணையை முழுமையாக ஆய்வு செய்த பின்னர் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்க்கமான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதனால் இந்த இவ்விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும். ஏனெனில் அதில் முகாந்திரம் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை