அமெரிக்க அதிபர் தேர்தல் தோல்வியை டிரம்ப் ஏற்காத நிலையில் ஆட்சி மாற்றத்துக்கான நடவடிக்கை தொடங்கியது: வெள்ளை மாளிகை திடீர் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
அமெரிக்க அதிபர் தேர்தல் தோல்வியை டிரம்ப் ஏற்காத நிலையில் ஆட்சி மாற்றத்துக்கான நடவடிக்கை தொடங்கியது: வெள்ளை மாளிகை திடீர் அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் டிரம்பின் நிர்வாகம் சுமுகமான ஆட்சி மாற்றத்துக்கான சட்ட நடைவடிக்கைகளை தொடங்கி உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 3ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பிடென் 306 எலக்டோரல் வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் தற்போதைய அதிபர் டிரம்ப் தனது தோல்வியை இன்னும் ஒப்புக் கொள்ளவில்லை. தேர்தலில் பல முறைேகடு நடந்ததாக வழக்கு தொடர்ந்து, சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற பிடென் அதிபராவதற்கு தேவையான சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை தொடங்கி இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கெலி மெக்னானி, ``தேர்தலுக்கு முன் ஒரு நிர்வாகம் எப்படி செயல்பட வேண்டும் என்பதை அதிபர் ஆட்சி மாற்றத்துக்கான சட்டம் வரையறுக்கிறது. இதற்காக, சட்ட ரீதியாக என்ன செய்ய வேண்டுமோ, அவற்றை செய்து வருகிறோம். இதனைத் தொடர்ந்து செய்வோம்,’’ என்று கூறினார். இதனிடையே, ஜார்ஜியா மாகாணத்தில் கைகளால் எண்ணப்பட்ட மறுவாக்கு எண்ணிக்கையில், பிடெனுக்கு 20.47 லட்சம், டிரம்பிற்கு 20.46 லட்சம் வாக்குகள் கிடைத்திருந்தது. இதனால் பிடென் 12,670 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து ஜார்ஜியா மாகாண செயலாளர் பிராட் ரபேன்ஸ்பெர்ஜர் பிடென் வெற்றி பெற்றதாக அறிவித்து அதற்கான சான்றிதழை வழங்கினார்.ஆண்டு இறுதிக்குள் 4 கோடி தடுப்பூசிவெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கெலி மெக்னானி கூறுகையில், ``அமெரிக்க  உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம், அவசரத் தேவைக்கான அங்கீகாரம்  அளித்ததும், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வழங்க டிரம்ப் நிர்வாகம்  முடிவு செய்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் 4 கோடி தடுப்பூசிகள் கிடைப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிபரால் தான் இது சாத்தியமானது. இதன் மூலம்  லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் உயிர் பிழைப்பார்கள். இதற்காக அவருக்கு நன்றி  தெரிவித்து கொள்கிறோம்,’’ என தெரிவித்தார்.டிரம்ப் மகனுக்கு கொரோனாஅதிபர் டொனால்டு டிரம்ப்பின் மூத்த மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியருக்கு இந்த வார தொடக்கத்தில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அறிகுறிகள் எதுவும் இன்றி அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது மருத்துவ வழிகாட்டுதல்களை பின்பற்றி வருவதாகவும் அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஜன.20ல் டிவிட்டர் கணக்கு ஒப்படைப்புடிவிட்டர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் நிக் பேசிலியோ கூறுகையில், ``வெள்ளை மாளிகையின் ஆட்சி மாற்றத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க டிவிட்டர் நிறுவனம் தயாராகி வருகிறது. ஏற்கனவே உள்ள பதிவுகள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டு, மீண்டும் பூஜ்யம் நிலையில் மாற்றி கொடுக்கப்படும். அதிபர் பயன்படுத்தும் போட்டஸ் (POTUS) என்ற  டிவிட்டர் கணக்கு, டிரம்ப் குழுவிடம் இருந்து பிடென் குழுவிடம் அடுத்தாண்டு ஜனவரி 20ம் தேதி, ஒப்படைக்கப்படும்,’’ என்றார்.

மூலக்கதை