கொரோனா 2வது அலை; வடமாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு: மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தினகரன்  தினகரன்
கொரோனா 2வது அலை; வடமாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு: மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதுடெல்லி: அரியானா, குஜராத், மத்திய பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா 2வது அலை வீசுவதால், பல இடங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்களின் இயல்புவாழ்க்கை பாதித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், அரியானா, குஜராத், மத்திய பிரதேசம், டெல்லி ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் அங்கு கொரோனா 2வது அலை ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு வைரஸ் தடுப்பு நடவடிக்கைளை முடுக்கி விட்டுள்ளது. வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் மீண்டும் பகுதிவாரியான ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன.குஜராத்தில் அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட் ஆகிய நகரங்களில் இரவு ஒன்பது மணி முதல் காலை 6 மணி வரையான இரவு நேரக் காலவரையற்ற ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் வெள்ளி இரவு 9 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை 57 மணி நேர முழு ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு உத்தரவால் அகமதாபாத்தின் அனைத்துச் சாலைகளிலும் காவல்துறையினர் சோதனைச் சாவடி அமைத்து இன்றியமையாச் சேவை வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்களைத் தடுத்து நிறுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பலரும் சொந்த ஊர் திருப்ப போக்குவரத்து வசதி இல்லாமல் பல இடங்களில் சிக்கித் தவிக்கின்றனர். குஜராத்தில் பள்ளி கல்லூரிகள் நவம்பர் 23 முதல் திறக்கப்படுவதாக ஏற்கனவே அறிவித்த உத்தரவைக் கல்வித் துறை திரும்பப் பெற்றுள்ளது. அரியானாவில் நவம்பர் 30 வரை பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என மாநிலக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் போபால், இந்தூர், குவாலியர், ரத்லம், விதிசா ஆகிய 5 மாவட்டங்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையிலான இரவு ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகள் டிசம்பர் 31 வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து வாகனங்கள் உபி எல்லையில் முழு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.13 கோடி பேருக்கு பரிசோதனை* இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் 46,232 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 90 லட்சத்து 50,597 ஆக உயர்ந்துள்ளது. * இதுவரை 84 லட்சத்து 78,124 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 564 பேர் பலியாகி உள்ளனர்.  மொத்த உயிரிழப்பு 1 லட்சத்து 32,726 ஆக அதிகரித்துள்ளது. * தற்போது 4,39,747 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை நாடு முழுவதும் 13.06 கோடி பேரிடம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 நாளில் 1 கோடி பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை