இந்தியாவில் கார்பன் வெளியேற்றத்தை 35 சதவீதமாக குறைக்க இலக்கு: பிரதமர் மோடி தகவல்

தினகரன்  தினகரன்
இந்தியாவில் கார்பன் வெளியேற்றத்தை 35 சதவீதமாக குறைக்க இலக்கு: பிரதமர் மோடி தகவல்

காந்திநகர்: இந்தியாவில் கார்பன் வெளியேற்றத்தை 30-35 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம், காந்தி நகரில் உள்ள தீனதயாள் பெட்ரோலிய பல்கலைக்கழகத்தின் 8வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கலந்துகொண்டார். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று நம் நாடு கார்பன் வெளியேற்றத்தை 30 முதல் 35 சதவீதம் வரை குறைப்பதற்கான இலக்கை நோக்கி முன்னேறி வருகின்றது. கடந்த 10 ஆண்டுகளில் இயற்கை எரிவாயுவை 4 மடங்கு பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் எண்ணெய் சுத்திகரிப்பு திறனை இரட்டிப்பாக்குவதற்கான பணிகளும் நடந்து வருகின்றது. எரிசக்தி துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெறுகின்றது. இதற்காக சிறப்பு நிதி ஒதுக்கப்பட உள்ளது. பல்கலையில் பட்டம் பெறும் மாணவர்கள் இந்த துறையில் ஆராய்ச்சி, உற்பத்தி மற்றும் இதர திட்டம் இருந்தால் அதனை செயல்படுத்த விரும்பினால் இந்த நிதி ஒரு நல்ல வாய்ப்பாகவும் அரசு உங்களுக்கு அளிக்கும் பரிசாகவும் இருக்கும். எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் கோடிக்கணக்கில் முதலீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. எனவே உங்களுக்கு இந்த துறையில் அதிக வாய்ப்புக்கள் இருக்கிறது.புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி இலக்கை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே அடைய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. சூரிய சக்தியின் விலையானது ஒரு யூனிட்டுக்கு ரூ-2க்கும் குறைவாக வந்துவிட்டது. முன்பு இது ரூ.12 முதல் ரூ.13வரை இருந்தது. இன்று சூரிய சக்திக்கு தான் முன்னுரிமை வழங்கப்படுகின்றது. 175 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உருவாக்குவதற்கான உறுதிபாட்டை கொண்டுள்ளோம். இந்த இலக்கை 2022ம் ஆண்டுக்கு முன்னரே அடைவோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது. மேலும் 2030ம் ஆண்டில் 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்ற இலக்கும் முன்கூட்டியே அடையப்படும். அதில் நம்பிக்கை கொண்டுள்ளேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மூலக்கதை