கேரள தங்கம் கடத்தல் வழக்கு; தங்கராணி சொப்னா ஆடியோ குறித்து குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேரள தங்கம் கடத்தல் வழக்கு; தங்கராணி சொப்னா ஆடியோ குறித்து குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை

திருவனந்தபுரம்: தங்க கடத்தல் ராணி சொப்னாவின் ஆடியோ குறித்து குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிடப்படலாம் எனும் தகவல் வெளியாகியுள்ளது. திருவனந்தபுரம் அமீரக தூதரகம் மூலம் தங்கம் கடத்திய வழக்கை என்ஐஏ, மத்திய அமலாக்கத்துறை, சுங்கஇலாகா ஆகிய அமைப்புகள் விசாரித்து வருகின்றன.

இந்த வழக்கில் சொப்னா, சரித்குமார், சந்திப்நாயர், முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் ஐஏஎஸ் உள்பட 30க்கும் மேற்பட்ேடார் கைது செய்யப்பட்டுள்ளனர்.   இந்த நிலையில் கடந்த இருதினங்களுக்கு முன்பு இணையதளத்தில் சொப்னா பேசிய ஆடியோ வெளியானது. அதில், முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தால் இந்த வழக்கில் அப்ரூவர் ஆக்குவதாக மத்திய அமலாக்கத்துறை என்னை கட்டாயப்படுத்தியது.

நான் கொடுத்த வாக்குமூலத்தை வாசித்து பார்க்க அனுமதிக்கவில்லை. ஆனால் நான் மறுத்துவிட்டேன் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து சிறைத்துறை டிஐஜி, சொப்னா அடைக்கப்பட்டுள்ள திருவனந்தபுரம் சிறைக்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில், ‘ஆடியோவில் உள்ளது சொப்னாவின் குரல்தான்.

ஆனால் திருவனந்தபுரம் சிறையில் வைத்து அது பதிவு செய்யப்படவில்லை’ என்றார். இதற்கிடையே ஆடியோ குரல் தன்னுடையதுதான் என சொப்னா முதலில் உறுதிப்படுத்தினார்.



ஆனால் எப்போது, யாரிடம் பேசியது என்பது எனக்கு நினைவில்லை என கூறினார். இந்த நிலையில் நேற்று வெளியான தகவலில், அது சொப்னாவின் குரல்தான் என்பது உறுதிசெய்யப்படவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே இதுகுறித்து விசாரிக்க கோரி மத்திய அமலாக்கத்துறை கேரள சிறைத்துறை டிஜிபி ரிஷிராஜ் சிங்கிடம் கடிதம் கொடுத்துள்ளது. ஆனால் சட்டப்படி, சிறைக்குள் நடக்கும் சம்பவம் குறித்து சிறைத்துறை விசாரிக்க முடியாது.

எனவே இதுகுறித்து விசாரிக்க கோரி சிறைத்துறை டிஜிபி ரிஷிராஜ் சிங், சட்டம் ஒழுங்கு டிஜிபி லோக்நாத் பெக்ராவிடம் கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் இதுகுறித்து விசாரிக்க முடியாது.

அந்த ஆடியோ தன்னுடையது அல்ல என சொப்னா கூறினால் மட்டுமே விசாரிக்க முடியும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆடியோ குறித்து விசாரிக்க மீண்டும் அமலாக்கத்துறை கேரள அரசுக்கு நெருக்கடி கொடுக்க தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பாக மீண்டும் அமலாக்கத்துறை கடிதம் கொடுத்தால் குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்படும் என கூறப்படுகிறது. இதற்கிடையே சொப்னாவின் ஆடியோவால் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, சிவசங்கருடன் துபாய் சென்றபோது முதல்வருக்காக கமிஷன் வாங்கியதாக வாக்குமூலம் கொடுக்கும்படி விசாரணை அதிகாரிகள் கட்டாயப்படுத்தியதாக சொப்னா ஆடியோவில் தெரிவித்திருந்தார்.

அப்போது சிவசங்கரும் உடன் இருந்ததால் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை தீர்மானித்துள்ளது.

.

மூலக்கதை