பிரபுதேவா டாக்டரை மறுமணம் செய்தது உறுதியானது

தினமலர்  தினமலர்
பிரபுதேவா டாக்டரை மறுமணம் செய்தது உறுதியானது

தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் கமர்ஷியல் இயக்குனர் எனப் பெயரெடுத்தவர் பிரபுதேவா. தனது அப்பா நடன இயக்குனர் சுந்தரத்திடம் உதவி மாஸ்டராகப் பணிபுரிந்து 90களில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகவும் விளங்கியவர். பின்னர் இயக்குனராக மாறி தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் படங்களை இயக்கியுள்ளார்.

பிரபுதேவாவுக்கும் அவரது நடனக் குழுவில் இருந்த ரமலத் என்பவருக்கும் பல வருடங்களுக்கு முன்பே ரகசியத் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் சில வருடங்களுக்கு முன்பு மரணமடைந்தார். எந்த ஊரில் இருந்தாலும் தனது இரண்டு மகன்களையும் சந்திக்க அடிக்கடி சென்னை வருவார் பிரபுதேவா.

சில வருடங்களுக்கு முன்பு பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கும் தீவிர காதல் இருந்தது. அவரைத் திருமணம் செய்து கொள்வதற்காக இந்து மதத்திற்கும் மாறினார் நயன். மேலும் தனது கையில் 'பிரபு' என்றும் டாட்டூ குத்திக் கொண்டார். ஆனால், இருவரும் திடீரெனப் பிரிந்துவிட்டார்கள்.

கடந்த சில வருடங்களாக சில நடிகைகளுடனும் கிசுகிசுக்கப்பட்டார் பிரபுதேவா. ஆனால், அதையெல்லாம் பொய்யாக்கி தற்போது டாக்டர் ஹிமானி என்பவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். பிரபுதேவா மும்பையில் இருந்த போது அவருக்கு சிகிச்சை அளிக்க வந்தவர்தான் பிஸியோதெரபிஸ்ட்டான ஹிமானி. சிகிச்சை அளிக்க வந்தவர் காதலில் சிக்கிக் கொண்டார்.

இருவரது திருமணமும் கடந்த மே மாதத்தில் ரகசியமாக நடந்து முடிந்துள்ளது. அந்த செய்தி தற்போது தான் வெளியில் வந்துள்ளது. இதை பிரபுதேவாவின் அண்ணனும், நடன இயக்குனருமான ராஜு சுந்தரமும் உறுதி செய்துள்ளார். பிரபுதேவாவின் மறுமணம் அவர்களது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை