பாகிஸ்தானில் 1,300 ஆண்டுகள் பழமையான விஷ்ணு கோயில் கண்டுபிடிப்பு

தினமலர்  தினமலர்
பாகிஸ்தானில் 1,300 ஆண்டுகள் பழமையான விஷ்ணு கோயில் கண்டுபிடிப்பு

பெஷாவர்: வட மேற்கு பாகிஸ்தானின் ஸ்வாட் மாவட்டத்தில் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட விஷ்ணு கோயிலை பாகிஸ்தான் மற்றும் இத்தாலிய தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா தொல்லியல் துறையைச் சேர்ந்தவர் பசல் காலிக். இத்தாலிய தொல்பொருள் திட்ட தலைவர் டாக்டர் லுகா என்பவருடன் ஸ்வாட் மாவட்டத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். பாரிகோட் குந்தை எனும் பகுதியில் அகழாய்வில் ஈடுபட்ட போது 1,300 ஆண்டுகளுக்கு முன்பு ஹிந்து ஷாஹி மன்னர்களின் காலத்தில் கட்டப்பட்ட விஷ்ணு கோயிலை இவர்கள் கண்டறிந்தனர். ஹிந்து ஷாஹி அல்லது காபூல் ஷாஹி என்பவர்கள் 850 முதல் 1026 வரை காபூல் பள்ளத்தாக்கு, பாகிஸ்தான், வடமேற்கு இந்தியா பகுதிகளை ஆண்டுள்ளனர்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கோயில் இடத்திற்கு அருகில் தற்காலிக ராணுவ முகாம், கண்காணிப்பு கோபுரங்களும் இருந்துள்ளன. மேலும் கோயிலுக்கு அருகில் ஒரு தண்ணீர் தொட்டி இருந்துள்ளது. பக்தர்கள் கோயிலுக்குள் வருகையில் சுத்தப்படுத்திக்கொள்ள அவை அமைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. ஸ்வாட் மாவட்டத்தில் ஆயிரமாண்டு பழமையான பல்வேறு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உண்டு. ஆனால் தற்போது தான் முதல் முறையாக ஹிந்து ஷாஹி கால தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளது. புத்த மத கோயில்கள் பலவும் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளன.

மூலக்கதை