வளர்ச்சி அதிகரிக்கும்: எஸ்.பி.ஐ.,

தினமலர்  தினமலர்
வளர்ச்சி அதிகரிக்கும்: எஸ்.பி.ஐ.,

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், இரண்டாவது காலாண்டில், நாட்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, இதற்கு முன் கணித்திருந்ததை விட அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது, எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை.

எஸ்.பி.ஐ., எகோரேப் ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, இரண்டாவது காலாண்டில், மைனஸ் 12.5 சதவீதமாக இருக்கும், என கணிக்கப்பட்டிருந்தது. தற்போதைய சாதகமான நிகழ்வுகளை வைத்து பார்க்கும்போது, வளர்ச்சி, மைனஸ் 10.7 சதவீதமாக இருக்கும் என தெரிகிறது.

தயாரிப்புத் துறை, சேவைத் துறை ஆகியவற்றின் செயல்பாடுகள், மற்றும் உலக பொருளாதார நிலை ஆகியவற்றை சார்ந்த, 41 குறிகாட்டிகளை வைத்து இந்த முடிவுக்கு வந்துள்ளோம்.நாட்டின் பொருளாதாரம், கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகி இருப்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.இன்னும் அந்த அச்சம் இருக்கிறது.


குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், கொரோனாவால் அதிக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களைப் பொறுத்தவரை, காலாண்டு முடிவுகள் நன்றாக இருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி, செப்டம்பர் மாதத்தில் கொரோனா பாதிப்பு அதிகஅளவில் இருந்துள்ளது. ஐந்தாம் கட்ட தளர்வுகள் மற்றும் பண்டிகை காலம் ஆகியவற்றை அடுத்து, இரண்டாவது அலை வர வாய்ப்பிருக்கிறது.


தடுப்பூசி எவ்வளவு விரைவில் வருகிறதோ, அதைப் பொறுத்தே, நுகர்வோர் நம்பிக்கையும் அதிகரிக்கும். இப்போதைய நிலவரப்படி, மூன்றாவது காலாண்டில் தான், நுகர்வோர் நம்பிக்கை முழுமையாக மீட்சியடையும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை