மின்னணு பொருட்கள் துறை 187 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது

தினமலர்  தினமலர்
மின்னணு பொருட்கள் துறை 187 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது

புதுடில்லி:நாட்டின், மின்னணு பொருட்கள் தயாரிப்பு துறை, கடந்த, 6 ஆண்டுகளில், மிக அதிக வளர்ச்சியை அடைந்துள்ளது என, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்து உள்ளது.


கடந்த, 2014 – 15ம் ஆண்டில், மின்னணு பொருட்கள் தயாரிப்பு மதிப்பு, 1.90 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதுவே, கடந்த 2019-–20ல், 5.47 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, 187 சதவீத வளர்ச்சியாகும்.கடந்த, 2016 – 17ல் இறக்குமதி செய்யப்பட்ட மின்னணு பொருட்களை விட, அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலை தற்போது வரை தொடர்கிறது.உள்நாட்டு தொழிலுக்கு மிகவும் நம்பிக்கை தரும் வளர்ச்சியாகும் இது.


மின்னணு பொருட்கள் மற்றும் தயாரிப்புகளுக்கு, இந்தியா மிகப் பெரிய சந்தையாக இருக்கிறது.உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பது, இந்தியாவின் சார்பு நிலையை குறைக்கவும், வர்த்தக பற்றாக்குறையை குறைக்கவும் உதவுவதாக அமையும்.மின்னணு பொருட்கள் தயாரிப்பில், மொபைல் போன் தயாரிப்பு, மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.


இந்தியாவில் தயாரிக்கப்படும் மொத்த மின்னணு பொருட்கள் மதிப்பில், 41 சதவீதம் மொபைல் போனின் பங்களிப்பாகும். இது தற்போதைய நிலையாகும். கடந்த, 2014 – 15ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, இது, 10 சதவீத அதிகரிப்பாகும்.இதற்கு அடுத்து, எல்.இ.டி., தயாரிப்பு மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.கடந்த, 2014 – 15ல் 2,172 கோடி ரூபாயாக இருந்தது, 2019 – 20ல், 16,250 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட, 7 மடங்கு வளர்ச்சியாகும்.

இதேபோல், ‘டிவி, பிரிஜ், வாஷிங்மிஷின், மைக்ரோவேவ் ஓவன்’ உள்ளிட்ட, நுகர்வோர் மின்னணு பொருட்கள் பிரிவின் வளர்ச்சி, 51 சதவீதமாக அதிகரித்து உள்ளது.தற்போது மத்திய அரசு, உற்பத்தியுடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஊக்கச் சலுகை திட்டத்தை, மின்னணு மற்றும் தொழில்நுட்ப துறைக்கும் விரிவுபடுத்தியதை அடுத்து, மேலும் அதிக வளர்ச்சியை, இத்துறை காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை