கோலோச்சும் ரொக்க புழக்கம் ஏ.டி.எம்., பயன்பாடு அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
கோலோச்சும் ரொக்க புழக்கம் ஏ.டி.எம்., பயன்பாடு அதிகரிப்பு

புதுடில்லி:ஏ.டி.எம்., மூலமாக, ரொக்கப் பணத்தை எடுப்பது, கொரோனா பாதிப்பால் ஆரம்பத்தில் சற்று குறைந்திருந்தாலும், மீண்டும் அதிகரித்துள்ளது.

ஏ.டி.எம்., மூலமாக, ஒரு முறை எடுக்கப்படும் சராசரி தொகை, கடந்த ஆகஸ்டில், 4,959 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது ஒரு சாதனை அளவாகும்.இந்த மாதத்தில் தான், ரொக்கப் புழக்கம், 26 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 12 சதவீதமாகும்.கொரோனா பாதிப்பின் ஆரம்பகட்டத்தில், ஏ.டி.எம்., மூலமாக பணம் எடுப்பது சற்று குறைந்தாலும், அதன்பின் கொரோனாவுக்கு முந்தைய காலத்தைவிட அதிகரித்துவிட்டது என்கிறார்கள், வங்கி துறையினர்.

கடந்த அக்டோபரில், யு.பி.ஐ., மூலமான ஆன்லைன் பணப் பரிவர்த்தனை எண்ணிக்கை, 200 கோடி என்ற உச்சத்தை தொட்டபோதிலும்கூட, ரொக்கப் புழக்கமே கோலோச்சி வருகிறது. இது குறித்து, ஹிட்டாச்சி பேமென்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான ருஸ்டம் இரானி கூறியதாவது:

ரொக்கம் என்பது இந்திய பொருளாதாரத்தின் தவிர்க்க முடியாத அங்கமாகும். மேலும், ஏ.டி.எம்.,கள் மக்கள், தங்களுடைய பணத்தை எளிதாக அணுக உதவுகிறது. கொரோனாவை தடுக்கும் விதமாக, நாடு முழுதும் தடை உத்தரவு அறிவிக்கப்பட்டதை அடுத்து, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், பரிவர்த்தனைகளில் கடும் சரிவு காணப்பட்டது. ஜூன் மாதத்திலிருந்து நிலைமை மெதுவாக மேம்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


இவை ஒருபுறமிருக்க, மக்கள் சிறிய அளவிலான தொகையை, அதாவது, 100 ரூபாயிலிருந்து, 300 ரூபாய் வரை, ‘டிஜிட்டல்’ மூலமாக பரிவர்த்தனை செய்கிறார்கள்.மாறாக, பெரிய தொகையை, ஏ.டி.எம்., மூலமாக எடுத்துக் கொள்கிறார்கள் என்கிறார்கள், ஏ.டி.எம்., பண சேவை நிறுவனத்தினர்.

மூலக்கதை