பீகார் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி குறித்து கேள்வி எழுப்பிய காங். மாஜி எம்பிக்கு நோட்டீஸ்: ஜி-23 தலைவர்கள் குறித்து கட்சிக்குள் சலசலப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பீகார் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி குறித்து கேள்வி எழுப்பிய காங். மாஜி எம்பிக்கு நோட்டீஸ்: ஜி23 தலைவர்கள் குறித்து கட்சிக்குள் சலசலப்பு

புதுடெல்லி: பீகார் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி குறித்து கேள்வி எழுப்பிய காங். மாஜி எம்பிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், ஜி - 23 தலைவர்கள் மீது நடவடிக்கை இல்லாததால், கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் எதிரொலியாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மத்தியில் கருத்து மோதல்கள் தொடங்கி உள்ளன.

தேர்தல் தோல்வியால் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து கட்சித் தலைமையை குறிவைத்து சில தலைவர்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இதனால், கட்சித் தலைமைக்கும், மூத்த தலைவர்களுக்கும் இடையே ெபாதுதளங்களில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.



இவ்வாறாக பொதுதளங்களில் கட்சி தலைமை குறித்து விமர்சனம் செய்வதை மூத்த தலைவர்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியிடம், கட்சியின் முன்னாள் எம்பி புர்கான் அன்சாரி கட்சியின் தேர்தல் தோல்வி குறித்தும், ராகுலுக்கு எம்பிஏ படித்த பட்டதாரிகளை விட சிறந்த ஆலோசகர்கள் தேவை என்றும் கூறி இருந்தார்.

இது, ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், புர்கான் அன்சாரிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக  ஜார்க்கண்ட் பொறுப்பான ஆர். பி. என் சிங், புர்கான் அன்சாரிக்கு அனுப்பிய கடிதத்தில், ‘வரும் ஏழு நாட்களுக்குள் கட்சி தலைமை குறித்து கூறிய கருத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும்’ என்ற கூறப்பட்டுள்ளது.



இதேபோல் சர்ச்சை கருத்துகளை தெரிவித்த மற்ற தலைவர்களுக்கும் நோட்டீஸ்  கொடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக மக்களவையில் நாடாளுமன்றக் கட்சியின் தலைவர் ஆதிர்  ரஞ்சன் சவுத்ரி அளித்த ஒரு பேட்டியில், ‘ஜி - 23 குழுவின் தலைவர்களில் (23  அதிருப்தி தலைவர்கள்) பெரும்பாலானோர் பீகார் தேர்தல் பிரசாரத்தில் இருந்து  விலகி  இருந்தனர்.

தோல்வி குறித்து கேள்வி எழுப்பும் தலைவர்கள், ஏன் தேர்தல்  பிரசாரத்திற்கு செல்லவில்லை? அவர்கள் தங்களது  பொறுப்பைச் செய்திருக்க வேண்டும்’ என்றார். கடந்த சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, கட்சி தலைமை குறித்து முடிெவடுக்க 23 மூத்த தலைவர்கள் கடிதம் எழுதினர்.



இவ்விவகாரம் கட்சிக்குள் பூதாகரமாக வெடித்த நிலையில், 23 அதிருப்தி தலைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அப்போதைய செயற்குழு கூட்டத்தில் கோரிக்க விடுக்கப்பட்டது. ஆனால், மூத்த தலைவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

ஆனால், தற்போது புர்கான் அன்சாரிக்கு எதிராக விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால், கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘கட்சியின் ஒழுக்க  விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியானவை.

புர்கான் அன்சாரிக்கு எதிராக நோட்டீஸ் வழங்கியது போன்று, மற்ற  தலைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால், அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.   கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறைகள் தொடங்கியுள்ளதால், சர்ச்சை கருத்துகளை தெரிவித்த தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முன்னாள்  மத்திய அமைச்சர் கபில் சிபல், கடந்த சில நாட்களுக்கு முன் பீகார் தோல்வி குறித்து கட்சித் தலைமைக்கு எதிராக கூறிய சர்ச்சை கருத்து குறித்து பேசுவதற்கு ஒன்றுமில்லை’ என்றனர்.

.

மூலக்கதை