ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர்: சிட்சிபாசை வீழ்த்தி அரையிறுதிக்கு நடால் தகுதி

தினகரன்  தினகரன்
ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர்: சிட்சிபாசை வீழ்த்தி அரையிறுதிக்கு நடால் தகுதி

லண்டன்: உலக தரவரிசையில் டாப்-8 இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில், லண்டன் 2020 பிரிவு நேற்றிரவு நடந்த போட்டியில் ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் 6-2, 7-5 என்ற நேர்செட்டில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை வீழ்த்தினார். முதல் 2 போட்டியில் தோல்வி அடைந்த ரூப்வெல் ஆறுதல் வெற்றி பெற்றார். டொமினிக் தீம் ஏற்கனவே 2 வெற்றியுடன் அரையிறுதியை உறுதி செய்துவிட்டார். இதே பிரிவில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு தொடங்கி நடந்த போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால், கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் மோதினர். இதில் நடால் முதல் செட்டை 6-4 என கைப்பற்ற 2வது செட்டை 6-4 என சிட்சிபாஸ் தன்வசப்படுத்தினார். வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டில் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால் 6-2 என கைப்பற்றினார். 3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்ற நடால் அரையிறுதிக்குள் நுழைந்தார். சிட்சிபாஸ் 2 தோல்வியுடன் வெளியேறினார். நாளை இரவு நடைபெறும் முதல் அரையிறுதியில் நடால்-ரஷ்யாவின் மெட்வெடேவ்வுடன் மோதுகிறார். இன்று இரவு 7.30 மணிக்கு டோக்கியோ பிரிவில் ஜோகோவிச்-அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) மோதுகின்றனர். இதில் வெற்றி பெறுபவர் அரையிறுதியில் டொமினிக்தீம்முடன் மோதுவார். நாளை அதிகாலையில் கடைசி லீக் போட்டியில் டேனில் மெட்விடேவ் (ரஷியா)-டியாகோ ஸ்வாட்ஸ்மேன் (ஜெர்மனி) மோதுகின்றனர்.

மூலக்கதை