2023ம் ஆண்டில் மகளிர் டி20 உலகக்கோப்பை: ஐசிசி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
2023ம் ஆண்டில் மகளிர் டி20 உலகக்கோப்பை: ஐசிசி அறிவிப்பு

துபாய்: மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள், 2023ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. முன்னதாக இப்போட்டி 2022ம் ஆண்டு நவம்பரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் வரும் 2022ம் ஆண்டு, நவம்பரில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா பரவல் காரணமாக சர்வதேச அளவிலான பல்வேறு போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டு விட்டன. இந்தியாவில் நடைபெற இருந்த ஆடவர் டி20 உலகக்கோப்பை போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஆண்டு ஒத்தி வைக்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளன. இதனால் அடுத்தடுத்த போட்டிகளை தள்ளி வைக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 2022ம் ஆண்டு நவம்பரில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருந்த மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள், 2023ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. இப்போட்டிகள் 2023ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி முதல் 26ம் தேதி வரை தென்னாப்பிரிக்க மைதானங்களில் நடைபெறும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஐசிசி நிர்வாகி ஒருவர் கூறுகையில் ‘பிர்மிங்ஹாமில் 2022 ஆகஸ்ட்டில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறும். அதனால் 2022 நவம்பரில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிகளை, 2023ம் ஆண்டுக்கு தள்ளி வைத்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.

மூலக்கதை