ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச்சை வென்றார் மெட்வதேவ்

தினகரன்  தினகரன்
ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச்சை வென்றார் மெட்வதேவ்

லண்டன்: இங்கிலாந்தில் நடைபெறும் நிட்டோ ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் லீக் சுற்றில் உலகில் முதல்நிலை வீரர்  நவோக் ஜோகோவிச்சை 2-0 என நேர் செட்களில் வென்ற டானில் மெட்வதேவ் அரையிறுதியை உறுதிப்படுத்தினார். டோக்கியோ 1970 பிரிவில் நடந்த இந்த லீக்  செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்(முதல் ரேங்க்), ரஷ்யாவின் டானில் மெட்வதேவ்(4வது ரேங்க்) ஆகியோர் மோதினர். ஆரம்பம் முதலே மெட்வதேவ் அதிரடி காட்டி புள்ளிகளை சேர்த்தார். ஆனால் ஜோகோவிச் வழக்கத்திற்கு மாறாக தடுமாற்றத்துடன் விளையாடினார். அதனால்  டானில் 6-3, 6-3 என நேர் செட்களில் ஜோகோவிச்சை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். இந்தப்போட்டி ஒரு மணி 21 நிமிடங்கள் மட்டுமே நடந்தது. இந்த வெற்றியின் மூலம் டேனில் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து உள்ளார்.  டோக்கியோ பிரிவின் மற்றொரு லீக் போட்டியில்  ஜெர்மனியின்  அலெக்சாண்டர் ஸ்வெவ்( 7வது ரேங்க்),  அர்ஜென்டினாவின்  டீகோ ஷ்வார்ட்ஸ்மேன்(9வது ரேங்க்) ஆகியோர் மோதினர். இப்போட்டியை 2-1 என்ற செட் கணக்கில் வென்ற அலெக்சாண்டர் அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்தார். தொடர்ந்து 2 ஆட்டங்களில் தோற்றதால் டீகோ அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டார்.  இப்போட்டி 2மணி 11நிமிடங்கள் நடந்தது.உலகின் நம்பர் ஒன் வீரரும், 17முறை கிராண்ட்  ஸ்லாம் பட்டங்களை வென்ற  ஜோகோவிச் சில நாட்களுக்கு முன்புதான் பாரிஸ்  மாஸ்டர் டென்னிஸ் பட்டத்தை  வென்றிருந்தார். இந்நிலையில் 4ம் நிலை வீரரிடம் அவர்  அதிர்ச்சி தோல்வி அடைந்தார். டோக்கியோ பிரிவில் தலா ஒரு வெற்றியுடன் களத்தில் இருக்கும் ஜோகோவிச், அலெக்சாண்டர்  இடையிலான கடைசி லீக் போட்டியில்  வெல்பவருக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும்.

மூலக்கதை