இன்று முதல் கோவாவில் ஐஎஸ்எல் கால்பந்து ஆரம்பம்

தினகரன்  தினகரன்
இன்று முதல் கோவாவில் ஐஎஸ்எல் கால்பந்து ஆரம்பம்

பன்ஜிம்: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 7வது சீசன் போட்டி இன்று கோவாவில் தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஏடிகே மோகன் பகான்-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தியாவின் பிரபலமான கால்பந்து தொடரான இந்தியன் சூப்பர் லீக்(ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி 2014ம் ஆண்டு தொடங்கியது. ஆரம்பத்தில் கொல்கத்தா, சென்னை என 8 அணிகள் பங்கேற்றன. இந்த ஆண்டு 11 அணிகள் களம் காண உள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை விளையாட வேண்டும். லீக் சுற்றில் முதல் 4 இடங்களை பிடிக்கும்  அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.  கொரோனா பீதி காரணமாக லீக் போட்டிகள் அனைத்தும் கோவாவில் உள்ள  உள்ள  ஜவஹர்லால் நேரு அரங்கம்(பதோர்தா), ஜிஎம்சி அரங்கம்(பாம்போலிம்), திலக் அரங்கம்(வாஸ்கோ) ஆகிய 3 அரங்குகளில் மட்டுமே நடக்கும். ரசிகர்களுக்கு அனுமதியில்லை. லீக் சுற்றில் மொத்தம் 115போட்டிகள் நடக்க உள்ளன. முதல் கட்ட அட்டவணையில் ஜன.11ம் தேதி வரை நடைபெற உள்ள 55 லீக் போட்டிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. உலக கோப்பை கால்பந்து  தகுதிச்சுற்றுப் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. அதற்கு ஏற்ப எஞ்சிய போட்டிகளுக்கான அட்டவணை பின்னர் வெளியிடப்படும்.  ஏற்கனவே கொரோனா பீதி காரணமாக 7வது  சீசன் தாமதமாக தொடங்குகிறது. தொற்றில் இருந்து வீரர்களை பாதுகாக்க  டிஜிட்டல் கண்காணிப்பு முறை செயல் படுத்தப்பட்டுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஏடிகே மோகன் பகான், கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. சென்னையில் தமிழக வீரர்கள்: சென்னை அணியில் இந்த ஆண்டு தமிழக வீரர்கள்   தனபால் கணேஷ், எட்வின் வென்ஸ்பால், பாலாஜி கணேசன், பாண்டியன் சீனிவாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சென்னை தனது முதல் போட்டியில் நவ.24ம்  தேதி ஜாம்ஷெட்பூர் எப்சி அணியை எதிர்கொள்கிறது. ஏடிகே மோகன் பகான் அணியில் தமிழக வீரர்கள் மைக்கேல் சூசைராஜ், ரெஜின் மைக்கேல் ஒடிஷா அணியில் நந்தகுமார் சேகர்,  பெங்களூர் அணியில் அஜித்குமார், கோவா அணியில்  அலெக்சாண்டர் ரொமோரியா ஜேசுராஜ் உட்பட சிலர்  இடம் பிடித்துள்ளனர். முதல்முறையாக... லீக் சுற்றில்  முதலிடம் பெறும் அணிகளுக்கு கேடயம் வழங்கும் முறை  2019-20 சீசனில் அறிமுகமானது. அந்த சீசனின் லீக் சுற்றில் 18 போட்டிகளில் விளையாடி 12 வெற்றி, தலா 3 தோல்வி, சமனுடன் 33 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த கோவாவுக்கு ‘லீக் வின்னர்’ கேடயம் வழங்கப்பட்டது.

மூலக்கதை