ராகுல், புஜாராவுக்கு வாய்ப்பு: ஹர்பஜன் சிங் நம்பிக்கை | நவம்பர் 19, 2020

தினமலர்  தினமலர்
ராகுல், புஜாராவுக்கு வாய்ப்பு: ஹர்பஜன் சிங் நம்பிக்கை | நவம்பர் 19, 2020

புதுடில்லி: ‛‛கோஹ்லி இல்லாத நிலையில் லோகேஷ் ராகுல், புஜாரா சிறப்பாக செயல்படுவர்,’’ என, ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் (டிச. 17–21, அடிலெய்டு) போட்டிக்கு பின், இந்திய அணி கேப்டன் கோஹ்லி, தனது மனைவி அனுஷ்கா சர்மாவின் பிரசவத்திற்காக நாடு திரும்புகிறார். இந்த வாய்ப்பை லோகேஷ் ராகுல், புஜாரா பயன்படுத்திக் கொள்வர் என, இந்திய ‛சுழல்’ வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இவர் கூறியது: உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான விராத் கோஹ்லி, ஆஸ்திரேலிய மண்ணில் எளிதாக ரன் குவிக்கக் கூடியவர். இவர் பாதியில் நாடு திரும்புவது இந்திய அணிக்கு இழப்பு. இருப்பினும் இந்த வாய்ப்பை லோகேஷ் ராகுல், புஜாரா பயன்படுத்திக் கொண்டு சாதிப்பர் என்று நம்புகிறேன். கடந்த முறை ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக விளையாடிய புஜாரா, மீண்டும் கைகொடுக்கலாம். இதேபோல தனது திறமையை நிரூபிக்க கிடைத்த நல்ல வாய்ப்பை ராகுல் பயன்படுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன். கோஹ்லி இருக்கிறார் அல்லது இல்லை என்பதை இந்திய வீரர்கள் மறந்துவிட வேண்டும். கடந்த முறை இங்கு பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை தொடர்வதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

சமீபத்தில் சொந்த மண்ணில் பங்கேற்ற டெஸ்டில் துவக்க வீரராக அசத்திய ரோகித் சர்மா, ஆஸ்திரேலிய மண்ணிலும் சாதிப்பார் என்று நம்புகிறேன். ஐந்து ஓவர்களுக்குள் இவரை அவுட் செய்யாவிட்டால் ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு சிக்கலாகிவிடும். இவரை போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு ஆஸ்திரேலிய மண்ணில் ரன் சேர்ப்பதில் எவ்வித சிரமமும் இருக்காது. இவர், சேவக் போல அதிவிரைவாக ரன் சேர்ப்பார் என்று எதிர்பார்க்கிறேன். முதல் டெஸ்ட் போட்டிக்கு முன், முழுஉடற்தகுதி பெற்றுவிடுவார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு ஹர்பஜன் கூறினார்.

மூலக்கதை